This Article is From Nov 20, 2018

சிபிஐ வழக்கு: தகவல் ‘லீக்’ ஆனதால் கோபத்தில் கொதித்த உச்ச நீதிமன்றம்!

அரசின் முடிவுக்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது

சிபிஐ வழக்கு: தகவல் ‘லீக்’ ஆனதால் கோபத்தில் கொதித்த உச்ச நீதிமன்றம்!

அலோக் வெர்மா மீதான லஞ்ச புகார் குறித்து மத்திய விசாரணை ஆணயைம், கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தி வந்தது

New Delhi:

சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, தனக்கு அளித்த கட்டாய விடுப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அலோக் வெர்மா மீதான லஞ்ச புகார் குறித்து மத்திய விசாரணை ஆணையம், கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தி வந்தது. அது குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட இருந்தது. அறிக்கை சமர்பிக்கப்படும் முன்னரே, அது குறித்தான தகவல்கள் கசிந்ததாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றம் மிகவும் கோபமடைந்துள்ளதாக தெரிகிறது.

இன்று வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘உங்களின் எந்த வழக்குகளும் விசாரிக்கத் தகுதியற்றவை. எப்படி வழக்கு குறித்தான தகவல்கள் வெளியே கசிந்தன' என்று கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா குறித்து ஒரு வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதிலிருந்து தன் பெயரை நீக்க சனா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் இருக்கிறது. அஸ்தானா மீதான புகார் குறித்து, எப்ஐஆர் பதிவு செய்ய அலோக் வெர்மா உத்தரவிட்டார்.

இது ஒரு புறமிருக்க, சதீஷ் சனாவிடம் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று மத்திய விசாரணை ஆணையத்திடம் சில மாதங்களுக்கு முன்னர் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார் அஸ்தானா. இதனால் சிபிஐ அமைப்புக்குள் பனிப் போர் மூண்டது. இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வெர்மா, அஸ்தானா மற்றும் பல அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளித்து அனுப்பியது.

இந்நிலையில், அரசின் முடிவுக்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. 

.