This Article is From Nov 23, 2018

நீட் தமிழ் வினாத் தாள் பிழைக்கு மதிப்பெண் கொடுத்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுக்கான தமிழ் வினாத் தாளில், 49 கேள்விகளுக்கு தவறான மொழிபெயர்ப்பு இருந்ததாக சொல்லி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது

நீட் தமிழ் வினாத் தாள் பிழைக்கு மதிப்பெண் கொடுத்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

The Supreme Court today quashed the Madras High Court directive to CBSE

New Delhi:

இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுக்கான தமிழ் வினாத் தாளில், 49 கேள்விகளுக்கு தவறான மொழிபெயர்ப்பு இருந்ததாக சொல்லி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிழையான கேள்விகளுக்கு சிபிஎஸ்இ அமைப்புப் பொறுப்பேற்று, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஏ.போப்டே மற்றும் நாகேஷ்வர் ராவ் ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில், ‘சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 10, 2018 அன்று அளித்தத் தீர்ப்பு, நியாயமற்றது. அதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. எனவே சென்னை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

மேலும் நீதிமன்றம் 2019-20 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை, என்.டி.ஏ அமைப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு, அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்தல் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் போது மேலும், ‘மிகவும் குறைவான மதிப்பெண் வாங்கியிருக்கும் மாணவர் கூட, முன்னர் கொடுக்கப்பட்ட தீர்ப்பினால், மிக அதிக மதிப்பெண் வாங்கிய மாணவராக மாறக்கூடும். இந்த விவகாரத்தின் ஆழத்தை உயர் நீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை' என்று கூறியது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், சிபிஎம் கட்சியின் டி.கே.ரங்கராஜன், நீட் வினாத் தாள் பிழை குறித்து பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தான், ‘பிழையான கேள்விகளுக்கு மாணவர்கள் பொறுப்பாக முடியாது. அவர்களுக்கு அனைத்து கேள்விகளுக்குமான முழு மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டது.

.