This Article is From Mar 09, 2020

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு சபாநாயகர் அவர்கள் மீது அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வார் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டார்.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ்

ஹைலைட்ஸ்

  • ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
  • 11எம்எல்ஏக்களும் ஈபிஎஸ்க்கு எதிராக வாக்கு அளித்தனர்.
  • திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சபாநாயகர் முடிவெடுக்க உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்கச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ல் பதவி ஏற்றதும் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது அவர் மீது அதிருப்தியிலிருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அவரது அரசுக்கு எதிராக, கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். 

இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து திமுக தரப்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. 

இதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டாக ஒரு நோட்டீஸ் கூட அனுப்பி நடவடிக்கை எடுக்காமலிருந்தது ஏன், இதுபோன்ற விவகாரத்தில் குறைந்தது மூன்று மாதத்தில் ஏதாவது ஒரு நடவடிக்கையைச் சபாநாயகர் எடுத்திருக்க வேண்டும் எனச் சரமாரி கேள்வி எழுப்பினார். 

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு சபாநாயகர் அவர்கள் மீது அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வார் என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை முடித்து  வைப்பதாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் விளக்கம் அளிக்கச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 11 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனபால் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

.