This Article is From Aug 29, 2018

சமாஜ்வாடி கட்சியில் பிளவு: சிவ்பால் யாதவ் புதிய கட்சித் தொடங்க உள்ளார் எனத் தகவல்!

கடந்த ஆண்டு ஜூலை மாதமே, மதச்சார்பற்ற சமாஜ்வாடி மோர்ச்சாவை தொடங்க உள்ளதாக சிவ்பால் யாதவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சமாஜ்வாடி கட்சியில் பிளவு: சிவ்பால் யாதவ் புதிய கட்சித் தொடங்க உள்ளார் எனத் தகவல்!
Lucknow:

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மாமாவும், முலாயம் சிங் யாதவின் சகோதரருமான சிவ்பால் யாதவ், சமாஜ்வாடி கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சமாஜ்வாடியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சிவ்பால் யாதவ், அகிலேஷ் யாதவுடனான மோதல் காரணமாக புதிய கட்சியைத் தொடங்குவார் எனப்படுகிறது. இந்த புதிய கட்சி, பாஜக-வுடன் கூட்டணி வைத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ்பால் யாதவ், ‘மதச்சார்பற்ற சமாஜ்வாடி மோர்ச்சாவை நான் உருவாக்கியுள்ளேன். யாருக்கெல்லாம் சமாஜ்வாடியில் மரியாதை கொடுக்கப்படவில்லையோ அவர்களெல்லாம் எங்களுடன் வர வேண்டும். சிறிய கட்சிகளையும் நாங்கள் ஒன்றிணைக்க முயல்வோம்’ என்றார்.

சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேறுவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு சிவ்பால், ‘இந்தக் கேள்வியை ஏன் நீங்கள் அகிலேஷ் யாதவிடம் கேட்க கூடாது?’ என்று பதில் கேள்வி கேட்டுள்ளார்.

இந்த திடீர் திருப்பங்களை அடுத்து அகிலேஷ் யாதவின் தந்தையும் சமாஜ்வாடி கட்சியை நிறுவியவருமான முலாயம் சிங் யாதவ், சகோதரருடன் செல்வாரா என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே, மதச்சார்பற்ற சமாஜ்வாடி மோர்ச்சாவை தொடங்க உள்ளதாக சிவ்பால் யாதவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சிவ்பால் யாதவ், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 3 முறை சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘தேர்தல் நெருங்க நெருங்க, இதைப் போன்ற பல செய்திகளை கேள்விப்படுவீர்கள். ஆனால், இந்நேரத்தில் தேர்தல் குறித்து கவனமாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்

.