This Article is From Dec 31, 2018

‘வணிகர் சங்கம்’ திரையிடயிருந்த குறும்படத்துக்குத் தடை: பின்னணி என்ன..?

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று சென்னை, சேப்பாக்கத்தில் ‘மரணத்தின் மடியில் மழலைகள்’ என்ற குறும்படம் திரையிடப்பட இருந்தது

‘வணிகர் சங்கம்’ திரையிடயிருந்த குறும்படத்துக்குத் தடை: பின்னணி என்ன..?

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று சென்னை, சேப்பாக்கத்தில் ‘மரணத்தின் மடியில் மழலைகள்' என்ற குறும்படம் திரையிடப்பட இருந்தது. இந்தத் திரையிடலுக்கு தற்போது தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தூத்துக்குடி மக்களின் நலனுக்காக, தங்களால் தயாரிக்கப்பட்டுள்ள ‘மரணத்தில் மடியில் மழலைகள்' என்ற குறும்படத்தை, சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்க வளாகத்தில் திரையிட உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். இதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை. ஆகவே, திரையிடலுக்கு காவல் துறை ஆட்சேபணை தெரிவிக்கிறது. காவல் துறையின் ஆணையையும் மீறி குறும்படம் வெளியிடப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஆளாவீர்கள்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

k2cru2d8

குறும்படம், தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் பரவியுள்ளது. இதையடுத்துத்தான் அரசு தரப்பு, போலீஸை உஷார்படுத்தி தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னை தற்போது பெரிதாகி வரும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், ‘போபாலில் இருந்த தனியார் நிறுவனத்திலிருந்து கசிந்த விஷவாயு காரணமாக, அந்த நகர மக்கள் எப்படி துன்பப்பட்டார்கள் என்பதை வலியுறுத்தும் விதத்திலேயே இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதைச் சென்னையில் பொதுத் தளத்தில் திரையிட ஏன் அனுமதி மறுக்கப்பட வேண்டும். இது கருத்துரிமையை நெறிக்கும் செயல். இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்' என்று பேசியுள்ளார்.

.