This Article is From Jan 06, 2020

Seeman vs Thiruma: “ஓன்றாக நிற்பது சாத்தியமா..?”- திருமாவுக்கு சீமான் பதிலடி!!

Seeman vs Thiruma: "இங்கு உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பது எனது பணி அல்ல."

Seeman vs Thiruma: “ஓன்றாக நிற்பது சாத்தியமா..?”- திருமாவுக்கு சீமான் பதிலடி!!

Seeman vs Thiruma: "எனக்கு நன்றாகத் தெரியும் 4 விழுக்காடு வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விட முடியாது என்று"

Seeman vs Thiruma: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பேசினார்கள். இருவரும் தமிழ்த் தேசிய கோட்பாட்டில் நாட்டம் உள்ளவர்களாக இருந்தாலும், அரசியல் களத்தில் வெவ்வேறு தளங்களில் பயணிப்பவர்கள். இந்நிலையில், தங்கள் அரசியல் உத்திகள் பற்றி பேசினார்கள். முதலாவதாக பேசிய திருமாவளவன், “இந்திய அளவில் வலிமை பெற்றிருக்கும் சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும்,” என்று சீமானை சூசகமாக சீண்டினார். அது பற்றி தனது உரையில் பதில் வாதம் வைத்தார் சீமான்.

சீமான் உரையின்போது, “தமிழ்த்தேசியம் போற்றும் எந்த அரசியல் கட்சித் தலைவர்களோடு நான் இல்லை. எவர்களோடு நான் கை கோர்க்கவில்லை. எல்லோருடனும் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆனால், தேர்தல் அரசியல் என்று வரும்போது, எல்லோரும் எந்தக் கூட்டணியில் அதிக இடங்கள் கொடுக்கிறார்களோ அதை நோக்கி ஓடுகிறார்கள். யாரும் என்னுடன் நிற்பதில்லை.

எனக்கு நன்றாகத் தெரியும் 4 விழுக்காடு வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விட முடியாது என்று. இருப்பினும் 15, 20 விழுக்காடு வாக்கு விழுக்காடு வரும் வரை நான் தனியாகத்தான் போராட வேண்டியிருக்கிறது. 

d4nuie4g

தொடர்ச்சியாக, என்னிடத்தில் சொல்கிறார்கள். ஏன் ஒன்றாக இணைந்து வேலை செய்வதில்லை என்று. இங்கிருக்கும் தலைவர்களை ஒன்றிணைப்பது எனது பணி அல்ல. ஆனால், தமிழர்களை ஒன்றிணைக்க முடியும்.

இங்கு உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பது எனது பணி அல்ல. ஆனால், தமிழ் இளைய சமூகத்தை ஒன்றிணைக்க முடியும். அது மட்டுமே சாத்தியமாகத் தெரிகிறது,” என்று பேசினார். 

முன்னதாக திருமாவளவன் பேசும்போது, “தமிழ் மகன்தான் தமிழ் நிலத்தை ஆள வேண்டும் என்பதிலும், தமிழர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்குள் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம். தமிழக அளவில் திமுகவையும் அதிமுகவையும் தூக்கியெறியும் சக்தியை நாம் பெற்றிருக்கிறோமா. தமிழ்த்தேசியத்திற்கு எதிராக சனாதனம் நிற்கிறது. இந்திய அளவில் மாபெரும் வலிமையை சனாதனக் கோட்பாடு பெற்றிருக்கிறது.

நாம் சனாதனத்துக்கு எதிராக நிற்கப் போகிறோமா, அல்லது அம்பேத்கரியம் மற்றும் பெரியாரியத்திற்கு எதிராக நிற்கப் போகிறோமா என்பதுதான் கேள்வி. தேசிய அளவில் வலிமை பெற்றிருக்கும் கட்சிகள் இரண்டு. காங்கிரஸ் மற்றும் பாஜக. ஒன்று ஜனநாயக சக்தி, இன்னொன்று சனாதன சக்தி. ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் காங்கிரஸால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்கிற தெளிவு வேண்டும். நாம் வாக்கு வங்கி அரசியலில் தன்னிறைவு பெறும் வரை நெளிவு சுளிவுகளோடுதான் அரசியல் உத்திகளை வகுக்க வேண்டும்,” என உறுதியுடன் பேசியிருந்தார். 

.