This Article is From Jun 08, 2018

நீட் தேர்வு தோல்வியால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை… தொடரும் சோகம்!

நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்

நீட் தேர்வு தோல்வியால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை… தொடரும் சோகம்!

ஹைலைட்ஸ்

  • முன்னர் பிரதீபா என்ற மாணவி நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்
  • சுபஸ்ரீ-யின் மரணம் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியுள்ளன
  • தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்ச்சி சதவிகிதம் குறைவு
Trichy:

நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவி சுபஸ்ரீ. இவருக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ள அவர், 720-க்கு 94 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பொதுப் பிரிவைச் சேர்ந்த இவருக்கு விதிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் 119 ஆகும். நீட் தேர்வில் தோல்வியடைந்தது சுபஸ்ரீயை மிகவும் மன வேதனை அடைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக அவர் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தன் வீட்டில் நேற்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுபஸ்ரீயின் மரணம் குறித்து அவரது தந்தை, `என் மகள் யாருடனும் பேச விருப்பம் காட்டவில்லை. இதனால், அவரை நாங்களும் தொந்தரவு செய்யாமல் இருந்தோம். நேற்று அவர் சாப்பிடக் கூட வெளியே வரவில்லை. இதையடுத்து, அவரின் கதவைத் தட்டினோம். மறுபக்கம் இருந்து எந்த சத்தமும் வராததால், கதவை உடைத்து உள்ளே சென்றோம். சீலிங் ஃபேனில் தூக்கிட்ட நிலையில் இருந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தோம். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு வந்த போதே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்' என்றார் தழுதழுத்த குரலில்.

கடந்த ஆண்டு, அனிதா என்றொரு 12 ஆம் வகுப்பு மாணவி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் பிரதீபா, சுபஸ்ரீ என்ற இரண்டு மாணவிகள் இந்த ஆண்டும் தற்கொலை செய்து கொண்டது மீண்டும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை உருவாக்க வாய்ப்புள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வுக்கு தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. மிகவும் வசதி பெற்ற நகரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பயிற்சி சுலபமாக கிடைக்கின்றது. அதே நேரத்தில், கிராமப் பின்புலத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இந்த பயிற்சி கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத அரசு சார்பிலேயே இந்த ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இருந்தும் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது.

(With inputs from agencies)

.