சீனாவுக்கு செல்லும் பிரதமர் மோடி: அதிபர் ஜின்பிங்-ஐ சந்திக்க உள்ளார்

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று சீனாவுக்கு புறப்படுகிறார்

சீனாவுக்க செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் ஜின்பிங்-ஐ இன்று சந்திப்பார்

ஹைலைட்ஸ்

  • எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்து கொள்ள மோடி சீனா செல்கிறார்
  • இந்தியா, இந்த அமைப்பின் முழு நேர உறுப்பினராக இருக்கிறது
  • சென்ற ஆண்டு தான் இந்தியா, இந்த அமைப்பின் முழு நேர உறுப்பினரானது
New Delhi / Qingdao:

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று சீனாவுக்கு புறப்படுகிறார். சீனாவின் கிங்டாவோவுக்குச் செல்லும் மோடி அங்கு நடக்கவுள்ள ஷாங்காய் கோ-ஆப்ரேஷன் ஆர்கனைசேஷன் அல்லது எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு இந்த மாநாட்டில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முழு நேர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் பிரதமர் மோடியே செல்கிறார். இந்த நிகழ்ச்சியில் மோடி, தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீன ஆதிபர் ஜின்பிங்-ஐ பிரதமர் மோடி சந்திப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. மாநாடு நடந்தாலும் இரு நாட்டுத் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியின் இந்தப் பயணம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை,

இன்று மதியம் 1:20 மணிக்கு சீனாவை சென்றடைவார் மோடி. அதன் பிறகு, அதிபர் ஜின்பிங்-ஐ சந்தித்து இரு நாட்டு உறவு குறித்துப் பேசுவார். குறிப்பாக, இரு நாட்டுக்கும் இடையில் உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு மோடி மேற்கொள்ளும் இரண்டாவது சீனப் பயணம் இது.

எஸ்.சி.ஓ மாநாட்டில் 8 முழு நேர உறுப்பினர்கள், 4 பார்வையிடும் உறுப்பினர்கள், மேலும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்வர். முக்கியமாக, தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளே எஸ்.சி.ஓ-வின் முழு நேர உறுப்பினர்கள்.

இந்த பயணத்தின் போது மோடி, பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹுசேனை சந்திப்பாரா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் இல்லை.

பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் ஆந்நாட்டில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களை முடக்க இந்தியா தொடர்ந்து சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த மாநாட்டின் போதும் இந்த கோரிக்கையை இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணம் குறித்து மோடி, `எஸ்.சி.ஓ-வின் முழு நேர உறுப்பினராக இந்தியா மாறியதில் இருந்து, அந்த அமைப்புடனான தொடர்பில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இந்தாண்டு நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

 `8 உறுப்பினர்கள் கொண்ட எஸ்.சி.ஓ அமைப்பு 42 சதவிகித உலக மக்கள் தொகை, 22 சதவிகித நிலப்பரப்பு, 20 சதவிகித சர்வதேச ஜிடிபி ஆகியவையின் பிரதிநிதியாக இருக்கும். இந்த அமைப்பின் மூலம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு மற்றும் கலாசார ரீதியாகவும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையில் இணக்கம் அதிகமாகும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.