This Article is From Jul 01, 2020

சாத்தான்குளம் லாக்கப் மரணம்: வாய்திறந்த ரஜினி; நன்றி தெரிவித்த உதயநிதி!

அக்குடும்பத்துக்கு நீதி கிடைக்கத் தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி

சாத்தான்குளம் லாக்கப் மரணம்: வாய்திறந்த ரஜினி; நன்றி தெரிவித்த உதயநிதி!

சாத்தான்குளம் லாக்கப் மரணம்: வாய்திறந்த ரஜினி; நன்றி தெரிவித்த உதயநிதி!

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தற்கு, உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸூம் தங்களது மொபைல் கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரும் போலீசாரால் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவர்களது உடல்களில் காயம் இருந்ததாக குற்றம்சாட்டிய ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர், அவர்களது பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதிகளிலும் ரத்தம் வடிந்ததாக அதிர்ச்சிப் புகார்களை சுமத்தியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, ஜூன் 22ம் தேதி இரவு பென்னிக்ஸ் மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் காலை உயிரிழந்தார். காவல்துறையினரின் பிடியில் இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு, சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது. 

இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்தார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், தனது கருத்தை ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்துக் கண்டித்துப் பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது,” என்று கருத்து தெரிவித்ததோடு, #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹாஷ் டேக்கையும் இணைத்துள்ளார். இதையடுத்து, #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹாஷ் டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

இதனிடையே ரஜினியின் ட்வீட் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 

"தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல' நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதி கிடைக்கத் தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி.

இதை ‘சின்ன இஷ்யூ'வாக நினைக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் சட்டப் பணியில் தங்களை உண்மையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

.