This Article is From Oct 17, 2018

“ஜல்லிக்கட்டைப் போன்று சபரி மலை விவகாரத்தில் அவசர சட்டம் வேண்டும்”

சபரிமலை விஷயத்திலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த எம்.பி ஆன்டோ அந்தோணி கோரிக்கை வைத்துள்ளார்

“ஜல்லிக்கட்டைப் போன்று சபரி மலை விவகாரத்தில் அவசர சட்டம் வேண்டும்”

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த போதும், மத்திய அரசின் நடவடிக்கையால் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அந்த விளையாட்டு சட்டபூர்வமாக மாற்றப்பட்டது. அதைப் போல சபரிமலை விஷயத்திலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த எம்.பி ஆன்டோ அந்தோணி கோரிக்கை வைத்துள்ளார்.

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இன்று சபரிமலை கோயில் மாலை 5 மணி அளவில் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, பெண்கள் கோயிலுக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு குறித்து ஐயப்ப பக்தர்களும், இந்து குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், கேரளாவில் இன்று பதற்றமான சூழல் நிலவுகிறது

அந்தோணி, பத்தணம்திட்டா தொகுதியிலிருந்து தான் லோக்சபாவுக்கு எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதிக்குக் கீழ் தான் சபரிமலை ஐயப்பன் கோயில் வருகிறது. இதனால் தான் அவரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எம்.பி அந்தோணி, ‘சபரிமலை கோயில் இருக்கும் தொகுதிக்கான எம்.பி-யாக நான், பிரதமருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வருமாறு நான் பிரதமரிடம் கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு சரியான பதில் எனக்கு வரவில்லை.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் மத்திய அரசின் நடவடிக்கையால் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு சட்டபூர்வமானது. அதேபோல ஒரு நடவடிக்கையை சபரிமலை விஷயத்திலும் எடுக்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.