This Article is From Jan 18, 2019

சபரிமலையில் எத்தனை பெண்கள் தரிசனம் மேற்கொண்டனர்? கேரள அரசு அறிக்கை தாக்கல்!

10 முதல் 50 வயதிலான 7,500க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

கனகதூர்கா மற்றும் பிந்துவிற்கு தொடர் அச்சுறுத்தல்கள் நீடித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு நீதிமன்றத்தில் அறிக்கை
  • கனகதூர்கா, பிந்து மனுவிற்கு பதிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
New Delhi:

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்யலாம் என்ற உச்சீநிதமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இதுவரை 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வழக்கில் கேரள அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஹான்சாரியா, இதுவரை 51 பெண்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர் என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். 16 லட்சம் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

இதில் 7,500 பேர் 10 - 50 வயதிலான பெண்கள் என்றும் இதில் ஆன்லைனில் பதிவு செய்யாமல் நேரடியாக சென்றவர்கள் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் தற்போது வரை 44 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 வயதிற்கு உட்பட்ட 7,564 பெண்கள் சபரிமலை தரிசனத்திறகாக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர் என்பதை அவர்களின் ஆதார் விவரம் மூலம் உறுதியாக தெரிவிக்கிறோம். இதில் 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். எங்களிடம் சபரிமலை வரும் பக்தர்களின் வயதை தெரிந்து கொள்வதற்கு வேறு எந்த வழியும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜன.2ஆம் தேதி சபரிமலை சென்று வந்த கனகதுர்கா, பிந்து என்ற பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எல்.என். ராவ், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள், கனக துர்கா மற்றும் பிந்து அம்மினி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள போலீசார் இரு பெண்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த வாரம் கனக துர்காவை அவரது மாமியார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சபரிமலைக்கு சென்று திரும்பிய அவர் மீது கோபம் அடைந்த மாமியார் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட கனக துர்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

.