This Article is From Jan 03, 2020

''குடியரசு தின அணிவகுப்பில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிர வாகனங்களுக்கும் இடமில்லை''

குடியரசு தின விழா அணி வகுப்பில் கேரளாவை சேர்ந்த வாகனங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

''குடியரசு தின அணிவகுப்பில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிர வாகனங்களுக்கும் இடமில்லை''

புத்தாண்டு தினத்தன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாநில மற்றும் துறை ரீதியான வாகனங்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.

New Delhi:

எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகனங்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்காது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வண்ண மயத்துடன்,வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்றும் குடியரசு தின விழாவின்போது 32-ல்16 மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் மட்டுமே பங்கேற்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள், மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய விழாவில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்க உரிமை உண்டு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி தொடர்பாக 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்..

1. தொடர்ந்து 2-வது ஆண்டாக கேரளாவின் கலாசார, பண்பாட்டு வாகனம் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக கலை மற்றும் கட்டிடக்கலையின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் வாகனம் அமைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. இந்த விவகாரம் குறித்து கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் கூறுகையில், 'கேரளா, மலையாளி என்ற வார்த்தைகளை கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு கடுமையாக மாறி விடுகிறது. அரசியல் தலையீடு இல்லாமல் மூன்றாவது கட்டத்திற்கு பின்னர் அனுமதி நிராகரிக்கப்பட்டிருக்காது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

3. புத்தாண்டு தினத்தன்று குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநில வாகனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையில் மேற்கு வங்கம் கடந்த 2019-ல் இடம்பெற்றிருந்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

4. நிராகரிப்பு குறித்து மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறுகையில், 'மேற்கு வங்க வாகனம் குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது என்பதை பாகுபாடாக பார்க்கிறோம். குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய விவகாரத்தில் மத்திய அரசை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது' என்று தெரிவித்தார்.

5. மகாராஷ்டிரா நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், அனுமதி மறுக்கப்பட்டதற்கான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. 

6. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் அக்கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களும் பட்டியலில் இடம்பெறவில்லை.

7. சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே தனது ட்விட்டர் பதிவில், 'குடியரசு தினம் என்பது தேசிய விழா. இந்த விழாவில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். 

8. குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகள் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தன. குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி. ஆகியவை இந்த இரு மாநிலங்களில் நிறைவேற்றப்படாது என்று மாநில அரசுகள் தெரிவித்தன. கேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

9. குடியுரிமை சட்ட திருத்தம் என்பது மத்திய அரசின் வரம்புக்கு உட்பட்டது என்றும், இதனை நிறைவேற்ற முடியாது என்று எந்த மாநிலமும் கூற முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

10. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி இருந்து வந்த நிலையில் நவம்பர் மாதம் ஆட்சி மாறியது. கூட்டணி கட்சியான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்திருக்கிறது. முன்னதாக பாஜகவுடன் கூட்டணி அமைத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டார். இதனால் 80 மணிநேரம் மாநிலத்தில் நீடித்த பாஜக ஆட்சி கவிழ்ந்தது. 

.