ராஜஸ்தானில் சட்டமன்றத்தை கூட்டுவதற்கான கோரிக்கையை ஆளுநர் நிராகரித்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது அமைச்சரவையுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக நேற்றைய தினம் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா எழுதிய கடிதத்தில், சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதற்கு எதிரானவன் நான் அல்ல என்று தெரிவித்துள்ளார். ராஜ்பவன் சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதற்காக பரிந்துரைகளை மனதில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், எனினும் முதலில் தீர்க்கப்பட வேண்டிய கேள்விகளை பட்டியலிட்டார்.
முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவர விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படியென்றால், 21 நாள் நோட்டீஸ் தேவையில்லை என்றும் அதுதொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை வைத்திருந்தார். முதல் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்த நிலையில், இரண்டாவது முறையாக சட்டமன்றத்தை கூட்ட பரிந்துரைத்தார்.
இந்நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் அனுமதியளித்துள்ளார். “தற்போது சட்டமன்றத்தை கூட்ட வேண்டாம் என்று நான் விரும்பவில்லை. முதல்வர் ஏதேனும் தீர்மானத்தை சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற விரும்புகிறாரா என்கிற கேள்வியெழுகிறது. அவர் வழங்கியுள்ள பரிந்துரையில் இது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பொது வெளியில் இது குறித்து பேசப்படுகிறது.” என ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கேள்வியெழுப்பியுள்ளார்.
தொற்று நோய்களின் போது அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் குறுகிய அறிவிப்பில் அழைப்பது கடினம் என்றும் ஆளுநர் கூறினார். அதே போல கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏக்களுக்கு 21 நாட்கள் நோட்டீஸ் கொடுப்பது குறித்து பரிசீலிக்க முடியுமா? என்றும் ஆளுநர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், சட்டமன்ற அமர்வின்போது சமூக இடைவெளி எவ்வாறு பின்பற்றப்படும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.