This Article is From Jun 25, 2019

வரிசைகட்டி நிற்கும் சட்டமன்றத் தேர்தல்கள்; ராகுல் கொடுத்த அழைப்பு… உற்சாகத்தில் காங்கிரஸ்!

தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவித்ததைத் தொடர்ந்து, இப்போதுதான் முதன்முறையாக கட்சியின் முக்கிய சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார்

கட்சியின் பல மூத்த நிர்வாகிகள் பலர், “காங்கிரஸ் கட்சியை ஒன்றாக வைத்திருந்த சக்தி நேரு- காந்தி குடும்பம்தான்” என்கின்றனர். 

New Delhi:

அடுத்த சில மாதங்களில் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளன. இது குறித்து விவாதிக்க அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த ‘சந்திப்புகள்' குறித்த பேச்சே, காங்கிரஸ் வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவாதாக ராகுல் அறிவித்ததில் இருந்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களும், அவரது முடிவை மாற்றிக் கொள்ள வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த, மாநில காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பை அடுத்து, காங்கிரஸின் காரிய கமிட்டி சந்திப்பும் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி, தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பாரா அல்லது, விலகுவாரா என்பது குறித்து அந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியோ, “தேர்தல் தோல்விக்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும். அதில் வேறு ஆப்ஷன் கிடையாது. நான் பதவி விலகுவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம். 

தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவித்ததைத் தொடர்ந்து, இப்போதுதான் முதன்முறையாக கட்சியின் முக்கிய சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரை ஜூன் 27 ஆம் தேதி, ராகுல் சந்திக்கிறார் என்றும், ஹரியானா மற்றும் டெல்லி மாநில தலைவர்களை அடுத்தடுத்த நாட்களில் சந்திப்பார் என்றும் தெரிகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களுக்காக இந்த சந்திப்பு நடக்கும் எனத் தெரிகிறது. அதேபோல நாட்டில் உள்ள அனைத்து மாநில கட்சித் தலைவர்களும், லோக்சபா தேர்தல் குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம். 

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு பெரும்பான்மையான ஆண்டுகள், காங்கிரஸின் தலைவர்களாக நேரு- காந்தி குடும்ப உறுப்பினர்கள்தான் இருந்துள்ளனர். தற்போது ராகுல் காந்தி, பதவி விலகுகிறேன் என்று சொன்னதைத் தொடர்ந்து, சோனியா மற்றும் பிரியங்காவை தலைவர் பொறுப்புக்கு நியமிக்கக் கூடாது என்றும் சொல்லிவிட்டாராம். இதனால், எப்படியும் வெளியில் இருந்து ஒருவர்தான் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. கட்சியின் பல மூத்த நிர்வாகிகள் பலர், “காங்கிரஸ் கட்சியை ஒன்றாக வைத்திருந்த சக்தி நேரு- காந்தி குடும்பம்தான்” என்கின்றனர். 
 

.