This Article is From Dec 31, 2018

புதுச்சேரி சட்டப்பேரவை வாயிலில் தர்ணா; பாஜக எம்.எல்.ஏ அதிரடி!

இன்று காலை அவர் சட்டப்பேரவை வாயிலில் கையில் பதாகைகளுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்

புதுச்சேரி சட்டப்பேரவை வாயிலில் தர்ணா; பாஜக எம்.எல்.ஏ அதிரடி!

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை வாயிலில், பாஜக-வின் நியமன எம்.எல்.ஏ, சாமிநாதன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை அவர் சட்டப்பேரவை வாயிலில் கையில் பதாகைகளுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது. இதைப் போன்ற ஒரு தடை விதிப்பு, புதுச்சேரியிலும் அமல் செய்யப்பட வேண்டும் என்று கோரி எம்.எல்.ஏ சாமிநாதன் தர்ணாவில் ஈடுபட்டார்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், சட்டப்பேரவை அவைக் காவலர்கள் சாமிநாதனை சமாதானம் செய்ய முயன்றனர். அதையடுத்து அவர் முதல்வர் நாராயணசாமியின் செயலரிடம் சென்று ‘உடனடியாக மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி கடிதம் அளித்தார்.

அவர் பின்னர் செய்தியாளர்களிடம், ‘புதுச்சேரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதிக்குமாறு பல முறை அரசிடம் வலியுறுத்தி வருகிறேன். எனது கோரிக்கைகளுக்கு செவி மடுக்கவில்லை என்பதால் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்' என்று தெரிவித்தார்.

.