This Article is From Jan 28, 2020

நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளிநடப்பு செய்த முதல்வர்… ஆக்ரோஷமான ஆளுநர்… புதுவையில் பனிப் போர்!!

2016 ஆம் ஆண்டு, கிரண்பேடி, புதுவை ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே, முதல்வருக்கும் அவருக்கும் தொடர்ந்து மோதல் போக்குதான் நிலவி வருகிறது.

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

Chennai:

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி, புதுச்சேரியில் அரசு சார்பில் குடியுரசு தினத்தைக் கொண்டாட நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மாநில முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கிரண்பேடியை மதிக்காமல், நிகழ்ச்சியின் பாதியிலேயே விலகிச் சென்றுள்ளார் நாராயணசாமி. இது அம்மாநில அரசியல் வட்டாரத்தையும் தாண்டி பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தால் கொதிப்படைந்துள்ள கிரண்பேடி, நாராயணசாமி தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். 

புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸில்தான் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், பத்ம விருது வாங்கியிருந்த மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு மரியாதை செய்யப்பட இருந்தது. ஆனால், இது குறித்து தனக்கு முன்னரே தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, மரியாதை செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல், நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பினார் நாராயணசாமி. முன்னரே நிகழ்ச்சி பற்றி தெரிவிக்காமல் இருந்தது மரபை மீறுவதாகும் என்று கூறும் நாராயணசாமி, கிரண்பேடி தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார். 

அதே நேரத்தில் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, பத்ம விருது வென்றவர்களை அவமதித்து விட்டதாக சொல்லி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறார். கலைஞர் வி.கே.முனுசாமி மற்றும் எழுத்தாளர் மனோஜ் தாஸ் ஆகியோருக்குத்தான் இந்த முறை பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

“தேசிய கதாநாயகர்களான இருவரையும் நாங்கள் அழைத்து புதுச்சேரி மக்கள் முன்னிலையில் மரியாதை செய்ய நினைத்தோம். திடீரென்று அவர்களிடம் நாங்கள் சொன்னபோதும், இருவரும் நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தனர். நிகழ்ச்சியில் பத்ம விருது வென்றவர்களுக்கு சால்வை கொடுத்து முதல்வர் மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்தோம். 

ஆனால் முதல்வரோ, ‘அது எப்படி என்னிடம் சொல்லாமல் இப்படிப்பட்ட விஷயத்தை ஏற்பாடு செய்யலாம்' என்று நிகழ்ச்சியில் கூச்சலிட்டார். அனைவருக்கு முன்பும் மிக அவமானகரமாக அந்த சம்பவம் இருந்தது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்,” என்று கொதித்தார்.

2016 ஆம் ஆண்டு, கிரண்பேடி, புதுவை ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே, முதல்வருக்கும் அவருக்கும் தொடர்ந்து மோதல் போக்குதான் நிலவி வருகிறது. பொதுநலத் திட்டங்களுக்கு ஆளுநர், சரிவர ஒப்புதல் கொடுக்க மறுக்கிறார் என்று முதல்வரும் காங்கிரஸ் தரப்பும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அவர் செயல்பட்டு வருவதாக நாராயணசாமி பொங்குகிறார்.

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த வழக்கில், நிதி, நிர்வாகம் மற்றும் சேவைத் துறைகளைப் பொறுத்தவரை ஆளுநர், அமைச்சரவையின் பரிந்துரையின்படியே செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. 

.