பேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கமல்ஹாசன், டிடிவி தினகரன் இரங்கல்!

தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது.

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கமல்ஹாசன், டிடிவி தினகரன் இரங்கல்!

பேராசிரியர் க.அன்பழகன் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன் - டிடிவி தினகரன்

ஹைலைட்ஸ்

  • நள்ளிரவு 1 மணியளவில் பேராசிரியர் க.அன்பழகனின் உயிர்பிரிந்தது.
  • திராவிட சிந்தனையின் தெளிவுரை அன்பழகன் - கமல்ஹாசன்
  • பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது

ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்த பேராசிரியர் க.அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் (97) உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. கடந்த மாதம் 24ம் தேதியன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குக் கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வந்தார். அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்து, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் உயிர் பிரிந்தது.

இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 2.30 மணியளவில் அன்பழகனின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

இதையடுத்து, பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பேராசிரியர் க.அன்பழகன் மறைவு தொடர்பாக ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.