This Article is From Aug 20, 2019

“மோடிஜி ஆர்.எஸ்.எஸ் அமைப்பையே மதிப்பதில்லை…”- பற்றவைக்கும் பிரியங்கா காந்தி!

முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத், இட ஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

“மோடிஜி ஆர்.எஸ்.எஸ் அமைப்பையே மதிப்பதில்லை…”- பற்றவைக்கும் பிரியங்கா காந்தி!

மோகன் பகவத்தின் பேச்சு, இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இருப்பதாக சொல்லி விமர்சிக்கப்பட்டது. 

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பையே மதிப்பதில்லை என்று காங்கிரஸின் பிரயங்கா காந்தி வத்ரா பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத், இட ஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ், “மோகன் பகவத், இட ஒதுக்கீடு விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றுதான் கூறினார். சமூகத்தில் இருக்கும் எந்த விஷயமானாலும் அது பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தது. இதை மேற்கோள்காட்டி, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் பிரியங்கா. 

“சமூகத்தில் நிலவும் எந்தப் பிரச்னையானாலும் அது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கூறுகின்றது. இதை வைத்துப் பார்க்கும்போது, மோடிஜியோ அவரது அரசாங்கமோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளை மதிப்பதில்லை என்று தெரிகிறது. இல்லையென்றால் அவர்கள் ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் ‘எந்தப் பிரச்னையும்' இல்லை என்று நினைக்கிறார்களா..?” என்று சூசகமான ட்வீட்டை பதிவிட்டுள்ளார். 

காங்கிரஸ் தரப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370, ரத்து செய்த விதத்தைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசிக்காமலேயே முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. 
 

மோகன் பகவத், இட ஒதுக்கீடு பற்றி, “இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருப்போர், அதற்கு எதிராக இருப்பவர்களின் குறைகளைக் கேட்டறியும்போதும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்போர், அதற்கு ஆதரவாக இருப்பவர்களின் வாதத்தைக் கேட்கும்போது  ஒரு நிமிடத்தில் தீர்வு காணப்படும். அதற்கு எந்த சட்டமும் விதிமுறைகளும் தேவைப்படாது” என்று பேசியிருந்தார். 

மோகன் பகவத்தின் இந்த பேச்சு, இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இருப்பதாக சொல்லி விமர்சிக்கப்பட்டது. 

.