முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்!

நேற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்!

2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார் பிரணாப்.

New Delhi:

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது என டெல்லியில் அவர் சிகிச்சை எடுத்து வரும் மருத்துவமனை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 84 வயதாகும் பிரணாப், நேற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்ட பிரணாப், தொடரந்து மருத்துமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 

இந்நிலையில் மருத்துவமனை தரப்பு, “ஆகஸ்ட் 10, 2020 ஆம் தேதி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மூளையில் உள்ள அடைப்பை சரி செய்ய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக மாறி வருகிறது. தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார்” என்று அறிக்கை மூலம் கூறியுள்ளது. 

2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார் பிரணாப். நேற்று தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து ட்விட்டர் மூலம் பிரணாப், “மருத்துவமனைக்கு வேறொரு காரணத்துக்காக வந்த எனக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் வந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், உரிய சோதனைகள் செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார். 

அவரின் இந்தப் பதிவைப் பார்த்து பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், பிரணாப் சீக்கிரமே குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று கூறினார்கள். 

மிக நீண்ட அரசியல் வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான பிரணாப், கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்தியக் குடிமகனுக்கு கொடுக்கப்படும் மிகப் பெரிய விருதான, பாரத ரத்னா விருதைப் பெற்றார். 1997 ஆம் ஆண்டு அவர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதைப் பெற்றார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு, சிறந்த நிர்வாகிக்கான விருதை வாங்கினார்.