This Article is From Dec 20, 2018

“ஆர்.எஸ்.எஸ் கைக் கூலிதான் பொன்.மாணிக்கவேல்..!”- காரணங்களை அடுக்கும் வன்னி அரசு

Pon Manikavel: பொன்.மாணிக்கவேலை அவர் எப்படி புகழ்கிறார் என்பதை வைத்தே பல விஷயங்களில் தெளிவு பெறலாம்

“ஆர்.எஸ்.எஸ் கைக் கூலிதான் பொன்.மாணிக்கவேல்..!”- காரணங்களை அடுக்கும் வன்னி அரசு

தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேலுக்கு, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது. இது குறித்து எச்.ராஜா, வைகோ உள்ளிட்ட சிலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, “பொன்.மாணிக்கவேல் ஒரு ஆர்.எஸ்.எஸ் கைக் கூலி… அவரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று கொதித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வன்னி அரசு, “காவல்துறையில் பணிபுரிய விரும்பி வருபவர்கள், உயரதிகாரிகளில் ஒருவரை ‘ரோல் மாடலாக' வரித்துகொள்வார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஒரு அதிகாரி போல யாரும் இருக்கக்கூடாது  என்கிற அளவுக்கு ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார் என்றால் அவர் பொன்.மாணிக்கவேல் தான்.

சட்டத்தை மதிப்பதில்லை, உயரதிகாரிகளை மதிப்பதில்லை, (வேண்டுமானால் உளவுத்துறை இயக்குநராக இருந்த திரு.ராமாநுஜம் அவர்களை கேளுங்கள்) மனித உரிமைகளை மதிப்பதில்லை. இப்போது தமிழக அரசையே மதிக்காமல், மத்தியில் ஆளும் பாஜக கும்பலுக்கு அடியாள் வேலை பார்த்து வருகிறார்.(அதற்கு கிடைத்த பரிசு தான் பணி ஓய்வுக்கு பிறகும் பணி கிடைத்திருப்பது) இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட ஒரு அதிகாரியாக கடந்த காலங்களில் செயல்பட்டவர் தான் இந்த பொன்.மாணிக்கவேல். இந்து அறநிலையத்துறையை களங்கப்படுத்தி, அது தேவையில்லாத துறை என்று மக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாக்கி அந்த துறையை இல்லாமல் செய்வது தான் பொன்.மாணிக்கவேலுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்.

இதற்கு பின்னணியில் இருப்பது ஆர்எஸ்எஸ் என்னும் சமூக விரோதக் கும்பல். இன்னும் கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட்' முடியாததால்,
சிலை கடத்தலுக்கு கூடுதலாக பொன் மாணிக்கவேலையே நியமித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.

மிக மோசமான அதிகாரியான பொன்.மாணிக்கவேலு மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறைப்படுத்த வேண்டும். அப்போது தான் காவல்துறை மீதான நம்பிக்கை வலுப்பெறும். அது மட்டுமல்லாது, சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை மறு விசாரணை செய்ய வேண்டும். இந்த வழக்கில் அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும். தமிழக அரசு துணிச்சலாக முடிவெடுத்து பொன்.மாணிக்கவேலை சிறைப்படுத்தினால் பல உண்மைகள் வெளியே வரும்” என்ற பல பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

வன்னி அரசின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, ஏடிஎஸ்பி, இளங்கோ, ‘கடந்த ஓர் ஆண்டாக, எங்களுக்கு பொன்.மாணிக்கவேல் பல விதங்களில் அழுத்தம் கொடுத்து வந்தார். அவரே, ஒருவர் குறித்து ஆவணங்கள் கொடுப்பார். அவர்தான் குற்றவாளி என்றும், கைது செய்யுங்கள் என்றும் எங்களிடம் கூறிவிடுவார். அது குறித்து எந்தவித மேல் தகவலும் சொல்லப்படாது.

ஒரு கட்டத்தில் எங்களால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று மாணிக்கவேலிடம் சொன்னோம். அதனால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இந்நிலையில்தான் டிஜிபி-யிடம் மனு கொடுக்க நாங்கள் வந்துள்ளோம். இனியும் பொன்.மாணிக்கவேல் தலைமையில் எங்களால் பணி செய்ய முடியாது என்றும், நீங்களே இது குறித்து ஒரு வழி சொல்லுங்கள் என்றும் டிஜிபி-யிடம் கேட்டுள்ளோம்' என்று அதிர்ச்சியளிக்கும் விதத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பல வித சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வன்னி அரசை தொடர்பு கொண்டோம், “முதலாவதாக எச்.ராஜாவுடன், பொன்.மாணிக்கவேல் மிகவும் இணக்கமாக செயல்படுவது பல மட்டங்களில் சந்தேகங்களை எழுப்புகின்றன. அது கூட, அவரின் தனிப்பட்ட விருப்பம் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், காஞ்சிபுரத்தில் உள்ள ஏகம்பரநாதர் கோயில் தொடர்பான வழக்கில் கூடுதல் கமிஷனராக இருந்த கவிதாவை, சிலை ஊழல் தொடர்பாக குற்றம் சுமத்தி கைது செய்தார். இவர் இருப்பது, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு. ஆனால், சிலை ஊழலைப் பற்றி இவர் ஏன் விசாரிக்க வேண்டும். அவருக்கு என்ன உரிமை உள்ளது. பழனியிலும் இதைப் போன்ற ஒரு குற்றச்சாட்டை அவர் சுமத்துகிறார். தொடர்ந்து, தனது வரம்பு மீறி இவர் செயல்பட்டு வருகிறார்.

‘அவர் வரம்பு மீறி செயல்படுகிறார் என்பதற்கும், ஆர்.எஸ்.எஸ் கைக் கூலி என்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?' என்றதற்கு, “தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, இந்து அறநிலையத் துறையை ஒழிக்கவே அவர் செயல்பட்டு வருகிறார். அவரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் அதையே உணர்த்துகின்றன.

தமிழகத்திலும் ஆந்திராவிலும் தான் இந்து அறநிலையத் துறை இயங்கி வருகின்றன. இதன் மூலம், பார்ப்பனர்கள் மட்டுமே கோயில் நிர்வாகத்தில் இருக்கலாம் என்ற நிலை மாறி, அனைத்து சமூகத்தினரும் உள்ளே வர முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்த உரிமை சாதரணமாக நமக்குக் கிடைத்துவிடவில்லை. இந்து அறநிலையத் துறையை, 1959 ஆம் ஆண்டு, காமராசர் தான் உருவாக்குகிறார். அதற்கு முன்னர், நீதிக் கட்சி, இந்து ஆலயங்கள் ஒழுங்கமைப்புச் சட்டம், 1857 இயற்றியது. இப்படி படிப் படியாக, கோயில் நிர்வாக அதிகாரம் மாற்று சமூகத்தினர் கைகளுக்கும் வந்தன.

இந்த நடைமுறைக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அறநிலையத் துறையை எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு திரிகின்றனர். அதற்கு பொன்.மாணிக்கவேல் அனைத்துக்கட்ட வேலைகளையும் செய்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ் உடன் மாணிக்கவேலுக்கு இருக்கும் தொடர்பை புரிந்து கொள்ள, எச்.ராஜா வைத்திருக்கும் ‘இந்து ஆலய மீட்பு' என்கின்ற ஒரு அமைப்பை பின் தொடருங்கள். அதில் பொன்.மாணிக்கவேலை அவர் எப்படி புகழ்கிறார் என்பதை வைத்தே பல விஷயங்களில் தெளிவு பெறலாம்” என்றார் விளக்கமாக.

.