This Article is From Mar 15, 2019

பொள்ளாச்சி வன்கொடுமை: வீடியோவை வைத்திருப்பதும் பகிர்வதும் குற்றம்! உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்களை வைத்திருப்பதும், பகிர்வதும் குற்றம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி வன்கொடுமை: வீடியோவை வைத்திருப்பதும் பகிர்வதும் குற்றம்! உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுடன் முகநூல் வழியாக நண்பர்களாக பழகி அவர்களை வெளியே அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்து அதனை காட்டி அந்த மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். இதனை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக அந்த கும்பல் செய்து வருவதாகவும், இவர்களால், சுமார் 200க்கும் மேலான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த கும்பலின் கைபேசியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் தெரிவிக்காததால் தொடர்ந்த அந்த கும்பலின் அட்டூழியம் நீடித்து வந்துள்ளது.

இதனிடையே, கடந்த 25ஆம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.

மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பாலியல் குற்றச்சாட்டுகளில் உள்ளான போது பாதிக்கப்பட்டவருடைய விவரங்கள் என்பது வெளிவர கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்த உச்சநீதிமன்ற அறிவிப்பையும் தாண்டி காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் முழு விவரங்களையும் ஏற்கனவே வெளியிட்டது. இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்து வந்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இடம்பெற்றிருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த செயல் என்பது கூட இனிமேல் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருபோதும் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்ல கூடாது என்பதனை மறைமுகமாக சொல்வது போல் உள்ளது என அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசாணையில் விதிமுறைகளை மீறி பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து திருச்சியைச் சேர்ந்த முகில் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக்கிளை, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரிக்க பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறிப்பிடப்படாத புதிய அரசாணையை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகைப்படம், ஆடியோ, வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றவர்களுக்கு பகிர்வதும் குற்றம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

 

மேலும் படிக்க : ‘எப்படி பெண்களை சிக்க வைத்தோம்..!'- பொள்ளாச்சி கொடூரம் பற்றி வீடியோ வாக்குமூலம்
 

.