This Article is From Mar 25, 2019

பொள்ளாச்சி விவகாரம்: எஸ்பி மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கு முடித்து வைப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பொள்ளாச்சி விவகாரம்: எஸ்பி மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கு முடித்து வைப்பு!

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்டது தொடர்பாக கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல் துறையினர் 4 பேரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அடையாளத்தை கோவை எஸ்.பி பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இடம்பெற்றிருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த செயல் என்பது கூட இனிமேல் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருபோதும் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்லக்கூடாது என்பதனை மறைமுகமாக சொல்வது போல் உள்ளது என அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜனின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஏராளமான போராட்டங்கள் வலுத்து வந்தன.

இதையடுத்து ஏ.பி.சூர்யா பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மாணவியின் அடையாளங்களை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மற்றும் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றும் அரசாணையில் பெண்ணின் அடையாளம் வெளியிட்ட உள்துறை செயலாளர் நீரஞ்சன் மார்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கீழுமை நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டும். அங்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தை அனுகும்படி மனுதார்ருக்கு அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்தார். இதனால் மனுதாரர் மீண்டும் பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

.