This Article is From Mar 19, 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கு ஏப்ரல் 2-தேதி வரை காவல் நீட்டிப்பு

வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்டவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனை கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கு ஏப்ரல் 2-தேதி வரை காவல் நீட்டிப்பு

கைதான 4 பேரும் வீடியோ கான்பரன்சிங் முறையில்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • வழக்கு சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
  • வழக்கை சிபிஐ இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை
  • தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

பொள்ளாச்சி கொடூர பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி இருக்கும் 4 பேருக்கும் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் பிறப்பித்துள்ளார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிபதி விசாரணை நடத்தினார். இதன் முடிவில் 4 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 4-ம்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். வழக்கில் தொடர்புடைய சபரிராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகியோர் கடந்த பிப்ரவரி 25-ம்தேதி கைது செய்யப்பட்டனர். திருநாவுக்கரசு மார்ச் 5-ம்தேதி கைதானார். 

பொள்ளாச்சி வழக்கில் கைதாகியிருக்கும் 4 பேரும் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாகத்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு காவல் துறை மறுத்து வருகிறது. 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு விட்டது. இருப்பினும், இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திருநாவுக்கரசு முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். 26 வயதாகும் அவர், எம்.பி.ஏ. படித்து சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு வைத்து அவர்கள் மூலம் இளம் பெண்களை பாலியல் ஆசைக்கு பயன்படுத்தி, அவற்றை வீடியோவாக திருநாவுக்கரசு எடுத்து வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்களை பணம் கேட்டு மிரட்டவும், மீண்டும் பாலியல் உறவுக்கு இணங்கவும் திருநாவுக்கரசு கும்பல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான திமுக ஆளுங்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்டவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனை கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.