“கொரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத எதிரி; ஆனால் கொரோனா வாரியர்ஸ்…”- பிரதமர் மோடி பேச்சு!

“கொரோனா வைரஸுக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் இடையிலான போரில் நம் போராளிகளே வெற்றி பெறுவார்கள்”

“கொரோனா வைரஸ் வேண்டுமானால் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால்"

New Delhi:

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் லாக்டவுனில் இருந்த இந்தியா, இந்த மாதம் முதல் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனா வைரஸ் வேண்டுமானால் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் கொரோனா போராளிகளான மருத்துவத் துறை ஊழியர்கள் (Corona Warriors) அழிக்க முடியாதவர்கள்,” என்று பேசியுள்ளார். 

அவர் மேலும், “கொரோனா வைரஸுக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் இடையிலான போரில் நம் போராளிகளே வெற்றி பெறுவார்கள்.

இந்த தீரமிகு போராட்டத்தில் மருத்துவ சமூகத்தின் கடும் உழைப்பு உள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் சீறுடை அணியாத படை வீரர்கள் போல. அவர்களுக்கு எதிரான வன்முறை, வெறுப்பை உமிழும் பேச்சு உள்ளிட்டவையை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் பேசும்போது தனது கருத்துகளை முன்வைத்தார் மோடி. 

பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதலே, ஊரடங்கு உத்தரவுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு தரப்பு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சென்ற மாதம் உள்நாட்டு விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவை இந்த மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டித்திருந்தாலும், படிப்படியாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க மேலும் தளர்வுகள் குறித்து அறிவித்துள்ளது.

இப்படி தளர்வுகள் ஒரு பக்கம் அறிவிக்கப்பட்டாலும், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

தற்போதைய நிலவரம் குறித்து, தன் இரண்டாவது ஆட்சியின் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டு நாம் வளர்ச்சிப் பாதையில் சென்றோம். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உலகை ஆச்சரியப்படுத்திய மாதிரியே, பொருளாதார மீட்சியிலும் உலகை இந்தியா ஆச்சரியப்படும்,” எனத் தெரிவித்தார். 

நேற்றைய ‘மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய மோடி, “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது. அதை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. தொடர்ந்து போராடுங்கள். முகவுரை அணியுங்கள். கைகளைக் கழுவுங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது,” என்றார். 

இந்தியாவில் தற்போது 1.9 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 5,300 பேர் உயிரிழந்துள்ளார்கள்.