This Article is From Jun 12, 2020

சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்த திட்டமா? தமிழக அரசின் முடிவு என்ன?

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக பரவும் தகவல் குறித்துக் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்த திட்டமா? தமிழக அரசின் முடிவு என்ன?

சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்த திட்டமா? தமிழக அரசின் முடிவு என்ன?

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் அடுத்தடுத்த கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும், 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும், சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இதையடுத்து சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதின் மூலம் சென்னையின்  மற்ற இடங்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே முறையான முன் அறிவிப்பு செய்து அதன் பிறகு 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் காணொளி காட்சி மூலம் விசாரித்து முடித்த பின், தமிழக அரசின் அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், சில கேள்விகள் எழுப்பினர். 

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக, நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு எதையும் எடுக்கவில்லை எனவும், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தார். 

“சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை. மருத்துவ நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் அவ்வப்பொழுது முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொற்றுப் பரவலைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக பரவும் தகவல் குறித்துக் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதை முழுமையாக மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர், அந்தத் தகவல் முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும், வதந்தியாக பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார். முறையாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இ-பாஸ் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

.