This Article is From Aug 22, 2019

மோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து!

“நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை"- சிதம்பரம்

மோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து!

ஒரு 10 மணி நேரத்துக்கு எந்தத் தகவலும் இல்லை. வந்ததற்குப் பிறகும் ஏன் உங்களைப் பூட்டிக் கொண்டீர்கள்- தமிழிசை கேள்வி

இரண்டு நாட்களுக்கு முன்னர், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்தது. உச்ச நீதிமன்றமும், சிதம்பரத்தின் மனு குறித்து உடனடியாக விசாரிக்க முடியாது என்று சொல்லிவிட்டது. இதனால் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இன்று நீதிமன்றத்தின் முன்னர் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் பாஜக-வின் மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்திரராஜன், ‘இந்த மொத்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் நடவடிக்கை தவறானதாக இருந்தது. அவர் மோசமான முன்னுதாரணமாக மாறியுள்ளார்' என்று விமர்சித்துள்ளார்.

அவர் இது குறித்து விரிவாக பேசும்போது, ‘பழி வாங்கும் நடவடிக்கையாக இருந்தால் கூட, உங்களை விசாரணைக்குக் கூப்பிடும்போது, அதற்கு நேரடியாக வந்திருக்கலாமே. ஏன் ஓடி ஒளியவேண்டும். ஒரு 10 மணி நேரத்துக்கு எந்தத் தகவலும் இல்லை. வந்ததற்குப் பிறகும் ஏன் உங்களைப் பூட்டிக் கொண்டீர்கள். 

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நேர்மையாக விசாரணையை எதிர்கொள்பவர் செய்யும் நடவடிக்கைப்போல இல்லையே. மடியில் கனமில்லை என்றால் உங்களுக்கு ஏன் பயம். ஆக, இந்த வழக்கு எப்படியாக வேண்டுமானாலும் மாறலாம். இதிலிருந்து அவர் மீண்டு வருகிறாரோ, இல்லையோ, அவர் இதை எதிர்கொண்ட விதத்தின் மூலம், மிக மோசமான முன்னுதாரணத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்' என்று தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்படுவதற்கு முன்னர், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் சிதம்பரம், “நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சட்டத்திலிருந்து நான் ஒளிந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுவதை மறுக்கிறேன். நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். தெளிவான தீர்க்கமான பார்வையுடன் என் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வேன். விசாரணை அமைப்புகள் சட்டத்தின்படி செயல்படும் என்று நம்புகிறேன். இதற்காக பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

.