This Article is From Aug 29, 2018

பணமதிப்பிழப்புக்கு பின் 99% ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது: ஆர்பிஐ அறிக்கை

கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது

பணமதிப்பிழப்புக்கு பின் 99% ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது: ஆர்பிஐ அறிக்கை
New Delhi:

மத்திய அரசால் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், 99 சதவிகிதத்துக்கும் மேலான தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு சிறு அளவிலான ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு சார்பில் அப்போது கூறப்பட்டது.

இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

  1. 2016 ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் தேதி 15.41 லட்சம் கோடி ரூபாய் அளவிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதில் 15.31 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நோட்டுகள் மீண்டும் ரிசர்வ் வங்கியிடம் வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. இதன் மூலம், 10,720 கோடி ரூபாய் அளவிலான தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என்று தெரிகிறது.
  3. மக்களிடமிருந்த தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டவுடன், அதன் உண்மைதன்மை சோதனை செய்யப்பட்டு அழிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
  4. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கடந்த நிதி ஆண்டு வரை, புழக்கத்தில் விடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 18 லட்சம் கோடி ரூபாய் எனப்படுகிறது. இது 38 சதவிகித அதிகரிப்பு ஆகும்.
  5. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அரசு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது.
  6. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆர்பிஐ, 7,965 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.
  7. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணம் மற்றும் ஊழல் ஒழியும் என்று மத்திய அரசால் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், மிகக் குறைந்த அளவிலான தொகை மட்டுமே திரும்பவும் பெறப்படவில்லை என்று ஆர்பிஐ சொல்லியுள்ளது.
  8. ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக இந்த நாடு மிகப் பெரும் விலையைக் கொடுத்தது. ஆனால், அதன் மூலம் நமக்கு மிகச் சிறிய பலனே கிடைத்தது’ என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
  9. அவர் மேலும், ‘வெறும் 13,000 கோடி ரூபாய் பணத்தைப் பெற, 2.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜிடிபி-யை இந்த நாடு இழந்தது. இது மட்டுமில்லாமல் பல நூறு பேர் இறந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பையும் இழந்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

.