This Article is From Aug 16, 2018

ட்ரம்புக்கு எதிராக கொந்தளிக்கும் அமெரிக்க ஊடகங்கள்!

ட்ரம்ப், பல சமயங்களில் ஊடகங்களை ஒரு எதிர்கட்சியை நடத்துவது போல் நடத்தியுள்ளார்

ட்ரம்புக்கு எதிராக கொந்தளிக்கும் அமெரிக்க ஊடகங்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்னர், ‘சில ஊடக நிறுவனங்கள் அமெரிக்க மக்களுக்கு எதிராக செயல்படுகிறது’ என்ற கறாரான விமர்சனத்தை வைத்தார். இதற்கு ஊடகத் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையொட்டி, ட்ரம்புக்கு எதிராக இன்று 300 அமெரிக்க செய்தி தாள்கள் தலையங்கம் எழுத முடிவெடுத்துள்ளன.

தி போஸ்டன் க்ளோப் செய்தி தாள்தான் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முதலில் முன்னெடுத்தது. இதையடுத்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. மேலும் 300 பத்திரிகைகள் மேல் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று இணைவதாக அறிவித்துள்ளன.

‘அமெரிக்காவின் மகத்துவமே சுதந்திரமாக செயல்படும் ஊடகத்தில் தான் உள்ளது. அதன் மூலம் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளிடமும் உண்மையை பேச முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஊடகத்தை ‘அமெரிக்க மக்களுக்கு எதிரானது’ என்று சித்தரிப்பது ஆபத்தானது. நாம் 200 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்து வரும் கொள்களைகளுக்கு அது முரணானது’ என்று போஸ்டன் க்ளோப் குறிப்பிட்டுள்ளது.

ட்ரம்ப், பல சமயங்களில் ஊடகங்களை ஒரு எதிர்கட்சியை நடத்துவது போல் நடத்தியுள்ளார். பலமுறை அவர், ‘ஃபேக் நியூஸ்’ என்ற வாக்கியத்தை ஊடகங்களை விமர்சிக்க பயன்படுத்தியுள்ளார்.

உதாரணத்திற்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரியில் ட்ரம்ப், ‘நியூயார்க் டைம்ஸ், என்பிசி நியூஸ், ஏபிசி, சிபிஎஸ், சிஎன்என் ஆகிய ஃபேக் மீடியாக்கள் எனது எதிரி கிடையாது. அது அமெரிக்க மக்களின் எதிரியாகும்’ என்று ட்வீட் செய்தார்.

இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.