This Article is From Oct 05, 2018

‘கடந்த வாரம் கூட தினகரனை சந்தித்துப் பேச ஓபிஎஸ் முயன்றார்!’-தங்க தமிழ்ச்செல்வன் பகீர்

தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால், ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. குறிப்பாக ஓ.பி.எஸ், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால், தமிழக அரசு நிச்சயம் கவிழ்ந்துவிடும்.

‘கடந்த வாரம் கூட தினகரனை சந்தித்துப் பேச ஓபிஎஸ் முயன்றார்!’-தங்க தமிழ்ச்செல்வன் பகீர்

கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். எடப்பாடி பழனிசாமியை பதவியிலிருய்து நீக்குவதற்காக அப்போது தினகரனுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நேர்காணலின் போது, ‘2017 ஜூலை, ஓ.பி.எஸ், தினகரனை ஒரு பில்டர் வீட்டில் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை பதவியிலிருந்து நீக்க உதவி செய்ய வேண்டும் என்று தினகரனிடம், பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். கடந்த வாரம் கூட அந்த பில்டரிடம், ‘தினகரனுடன் மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கேட்டுள்ளார். திரைக்குப் பின்னால் அவர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார். ஆனால், கட்சி மேடைகளில் அவர் எங்களைத் தாக்கிப் பேசுகிறார்’ என்று அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தெரிவித்தார்.

தங்கதமிழ்ச்செல்வனின் இந்த பேட்டி, அதிமுக வட்டாரத்திலும் எடப்பாடி பழனிசாமி இடத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா குடும்பத்துக்கு ஆரம்பம் முதலே தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ், நெருக்கமாக இருந்தாலும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அனைத்தும் மாறியது. சசிகலாவுக்கு எதிராக பத்திரிகையாளர்களிடம் புகார் கூறிய அவர், ‘தர்ம யுத்தத்தையும்’ ஆரம்பித்தார். இதையடுத்து, அவர் தலைமையில் அதிமுக-வின், தனி அணி ஒன்று உருவானது. அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார். அவரும் சில நாட்களில் சசிகலாவுக்கு எதிராக காய் நகர்த்தி, தனியாக பிரிந்து சென்றார். இதையடுத்து ஓ.பி.எஸ்-ஸும், ஈ.பி.எஸ்-ஸும் ஒன்றாக சேர்ந்தனர்.

சசிகலா தலைமையிலான அதிமுக அணி, தனித்து விடப்பட்டது. பன்னீர் செல்வம், எடப்பாடி அணியுடன் சேரும் போது, ‘சசிகலா, கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன் வைத்தார். இதையடுத்து அவருக்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது. ஆனால், கட்சியுலும் ஆட்சியிலும் ஓ.பி.எஸ் தொடர்ந்து ஓரங்கப்பட்டப்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், தங்க தமிழ்ச்செல்வனின் நேர்காணல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, பன்னீர் செல்வமோ, தினகரனோ இந்த விவகாரம் குறித்து எந்த பதிலும் தரவில்லை.

அதே நேரத்தில் அதிமுக-வின் மூத்த தலைவர் ஒருவர், ‘ஆகஸ்ட் மாதம் இரு அணிகளும் சேர்வதற்கு முன்னர் தான், அவர்கள் சொன்ன சந்திப்பு நடந்துள்ளதாக தெரிகிறது. சந்திப்பு நடந்ததற்கு ஆதாரம் எதையாவது முதலில் அவர்கள் கொண்டுவரட்டும். அதன் பிறகு இது குறித்து பேசலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

18 சட்டமன்ற உறுப்பினர்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு சீக்கிரமே அறிவிக்கப்பட உள்ளது. அதில் தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால், ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. குறிப்பாக ஓ.பி.எஸ், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால், தமிழக அரசு நிச்சயம் கவிழ்ந்துவிடும்.

.