“தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை!”- அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்!!

தமிழகத்தில் நேற்று 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை!”- அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்!!

ஒட்டுமொத்த அளவில் 98,392 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது
  • ஊரடங்கு நேரத்திலும் தொற்றுப் பரவல் அதிகமாகவே உள்ளது
  • சென்னையிலும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போதும், நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறவில்லை,” என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

தமிழகத்தில் நேற்று 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 2,027 பேர். ஒட்டுமொத்த அளவில் 98,392 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,095 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 56,021 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 41,047 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,321 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

இப்படியான சூழலில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்று பலர் கேள்வி கேட்கிறார்கள். அப்படி மாறவில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர்-தான் கொரோனா தொற்றின் நிலை குறித்து விளக்கம் அளிக்கும். அந்த அமைப்பு கொடுத்த தகவல்படி, இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறவில்லை என்பது தெரிகிறது,” என்று கூறியுள்ளார்.