This Article is From Nov 29, 2018

புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறார் நிர்மலா சீதாராமன்!

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தமிழிகம் வருகிறார்.

புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறார் நிர்மலா சீதாராமன்!

கடந்த 15ஆம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 60–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல், கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார்.

இந்நிலையில் நாளை தமிழகம் வருகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களையும், நாளை மறுநாள் தஞ்சாவூர் மாவட்டத்தினையும் ஆய்வு செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

.