இ-பாஸ் நடைமுறையில் புதிய தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!
இ-பாஸ் நடைமுறையில் புதிய தளர்களை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் வணிகரீதியாக தமிழ்நாட்டிற்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளியூர், வெளி மாநிலங்கள் செல்லவும் இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று அண்மையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து, பின்பற்றப்பட்டு வந்தது. இதனிடையே, ஆகஸ்ட் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இ-பாஸ் நடைமுறை தமிழகத்தில் எளிதாக்கப்பட்டது. எனினும், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், வணிகரீதியாக தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு உடனடி இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு உடனடி இ-பாஸ் வழங்கப்படும். மேலும் அந்த நபர் 72 மணி நேரத்தில் தமிழகத்தில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்த வேண்டியது கிடையாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திரைத்துறையினர், சட்டப் பணி, தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சார்ந்த பணிகளுக்கு வருவோருக்கும் தனிமைப்படுத்துதல் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.