This Article is From Aug 12, 2019

நான் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க ஆசைப்படவில்லை: வெங்கையா நாயுடு!

2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்ததும், அரசு பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று நாயுடு நினைத்தாராம்.

நான் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க ஆசைப்படவில்லை: வெங்கையா நாயுடு!

தான் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், கண் கலங்கியதாக வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Chennai:

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனக்கு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் எண்ணமே இருக்கவில்லை என்று கூறியுள்ளார். 

தான் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், கண் கலங்கியதாக வெங்கையா நாயுடு கூறியுள்ளார். பாஜக அலுவலகத்துக்குப் போக முடியாது என்பதும், கட்சித் தொண்டர்களைப் பார்க்க முடியாது என்பதும்தான் அதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

“எனது அருமை நண்பர்களே, நான் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும்… நான் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என நினைக்கவில்லை” என்று பேசினார். தான் துணை ஜனாதிபதியாக இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, நாயுடு, “Listening, Learning & Leading” என்ற ஆங்கிலப் புத்தகத்தை சென்னையில் நடந்த விழா ஒன்றில் வெளியிட்டார். அந்த விழாவின்போதுதான் நாயுடு, மனம் திறந்து பேசியுள்ளார். 

2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்ததும், அரசு பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று நாயுடு நினைத்தாராம். அது குறித்தும் மோடியிடம் தெரிவித்திருந்தாராம். 

“துணை ஜனாதிபதி பொறுப்புக்குக் கூட நான் சில பெயர்களை முன் மொழிந்தேன். ஆனால், கட்சி நாடாளுமன்ற போர்டு சந்திப்புக்குப் பின்னர் அமித்ஷா, நான்தான் அந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று சொன்னார். அதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் நாயுடு.

அவர் தொடர்ந்து, “நான் ஏபிவிபி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் மிகவும் இளமை காலத்தில் சேர்ந்தேன். அந்த இயக்கங்களின் எதிர்காலத்தை நினைத்துதான் தற்போது கவலைப்படுகிறேன். சாதாரண ஆளான எனக்கு கட்சி அனைத்தையும் தந்தது. பிரதமர் பதவியைத் தவிர… அதற்கு நான் ஏற்றவன் அல்ல. எனது நிலை குறித்தும் தகுதி குறித்தும் நன்றாக தெரியும்” என்றார். 

.