This Article is From Apr 03, 2019

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம்! - பொன்.ராதாகிருஷ்ணன்

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம் என கன்னியாகுமரி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம்! - பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவு தேர்வு அவசியம் என அமல்படுத்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில் இந்த நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அதன் தேர்தல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, வரும் நாடளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற கடுகளவும் வாய்ப்பில்லை என்பதால் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. வாக்குகளுக்காக யாரையும், எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு மூலம் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். நீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான விஷயம். ஏழை மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்க நீட் தேர்வு அவசியம்.

தற்போது அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். சாதாரணமாக ஒரு மருத்துவ சீட் வாங்க ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது, ஏழை மாணவர்கள் எப்படி பணம் கட்ட முடியும்? இப்படி கோடிக்கணக்கில் செலவளிக்க முடியாத பாமர மக்கள் மருத்துவம் படிக்க ‘நீட்' தேர்வுதான் ஒரே வழி என்றார்.

மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது என்கிறார்கள். கணக்கில் காட்டப்படாத பணத்தை, மக்களை விலைக்கு வாங்க வைக்கப்பட்டிருந்த பணத்தை பறிமுதல் செய்தால் அது தவறா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

.