This Article is From Mar 25, 2019

ஸ்டாலினுக்கு நன்றி! - நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள்!! 2 பக்க அறிக்கை வெளியிட்ட நயன்தாரா

2 நாட்களுக்கு முன்பு நடந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாக மாறியது. அவர் அங்கம் வகிக்கும் திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு நன்றி! - நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள்!! 2 பக்க அறிக்கை வெளியிட்ட நயன்தாரா

திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

ராதா ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா 2 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

2 நாட்களுக்கு முன்பு நடந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாக மாறியது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். 

நடிகர் சங்கம் தரப்பில் அதன் தலைவர் நாசரும் ராதாரவியின் செயலை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பல காலங்களாக ராதாரவியின் பேச்சு இரட்டை அர்த்த வசனங்களாகவும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாக கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும், ராதாரவியின் செயல் ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் மனஉளைச்சலை தருவதாக குறிப்பிட்ட நாசர், இதனை ராதாரவி ஏன் உணரவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பிடும் விதமாக வருங்காலத்தில் வக்கிரமான பேச்சை ராதாரவி தவிர்ப்பார் என நம்புவதாக நாசர் கூறியிருந்தார். 

சர்ச்சை வலுத்ததை தொடர்ந்து, ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். இதற்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்து 2 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

தொழில் ரீதியில் தவிர்த்து மற்ற எந்த வகையிலும் நான் அறிக்கை வெளியிடுவதில்லை. ஆனால் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகள் மற்றும் உணர்வற்ற,  பாலியல் ரீதியாக சில ஆண்கள் கருத்து தெரிவித்தாலும் அதனை பெண்கள் பொறுத்துக் கொள்ளும் நிலை ஆகியவற்றால் நான் என் நிலைப்பாட்டை தெரிவிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.

பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த ராதா ரவி மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு முதலில் என் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

அனைவரும் பெண்களில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை ராதாரவிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களை கீழ்த்தரமாக பேசுவதம், பாலியல் ரீதியாக கருத்தை தெரிவிப்பதும்தான் பெருமை என்பதைப் போன்று சில ஆண்கள் நினைக்கின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது. 

ஒரு மூத்த நடிகர், அனுபவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் ராதா ரவி இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக தவறான பாதையில் வழிநடத்தும் காரியத்தை செய்கிறார். 

விளம்பரத்திற்காகவும், கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காகவும் இதுபோன்று பேசுவதை ராதாரவி போன்ற நடிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அவரது பேச்சை மேடையில் இருந்த ஆண்கள் சிலர் கைத்தட்டி வரவேற்றதுதான் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி செய்தால், தனது வழக்கமான பேச்சை ராதாரவி தொடர்ந்து பேசுவார். 

எனவே இதுபோன்ற பேச்சுகளை ஊக்கப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக புகார்களை விசாரிக்க உச்ச நிதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாகா கமிட்டியை அமைப்பீர்களா என்று நடிகர் சங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு - திமுக-விலிருந்து ராதாரவி நீக்கம்..!- என்ன நடந்தது?

.