This Article is From Jun 12, 2019

எடப்பாடியார் முன்னிலையில் அதிமுக-வில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி!

சிறிது காலமாக அரசியல் மேடைகளில் இருந்து விலகியிருந்த ராதாரவி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்

எடப்பாடியார் முன்னிலையில் அதிமுக-வில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி!

“திமுக-வுக்கு என்னால் எந்த பாதிப்பும் வர வேண்டாம். நானே கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்”

திமுக-வில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

8shi8qho

சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராதாரவி. அப்போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். திரைத் துறையினர் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து திமுக, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாகவும் அறிவித்தது. இந்த முடிவு வந்ததைத் தொடர்ந்து, ராதாரவி, “திமுக-வுக்கு என்னால் எந்த பாதிப்பும் வர வேண்டாம். நானே கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று தடாலடியாக அறிவித்தார். 

சிறிது காலமாக அரசியல் மேடைகளில் இருந்து விலகியிருந்த ராதாரவி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடனிருந்தார். ராதாரவி, திமுக-வில் இணைவதற்கு முன்னர் அதிமுக உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கட்சி சார்பில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ-வாகவும் ராதாரவி இருந்துள்ளார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக இந்த செய்தி வந்துள்ளது. ராதாரவி கட்சியில் இணைந்தபோது முதல்வருடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கவில்லை. ஏற்கெனவே, அதிமுக-வில் ‘ஒற்றைத் தலைமை' கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

.