This Article is From Sep 03, 2019

தேசிய ஊட்டச்சத்து வாரம்: கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் என்ன??

அஜினோமோட்டோவில் மோனோசோடியம் க்ளூட்டாமேட் என்னும் சுவை ஊக்கி இருக்கிறது.  இது புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. 

தேசிய ஊட்டச்சத்து வாரம்: கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் என்ன??

ஹைலைட்ஸ்

  • கர்ப்பிணிகள் பப்பாளி, அஜினோமோட்டோ போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பிணிகளுக்கு கூடுதலாக 300 கிலோ கலோரிகள் தேவைப்படுகிறது.
  • கர்ப்பக்காலத்தில் இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது.

எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடைக்கப்படுகிறது.  குறிப்பாக கர்ப்பிணிகள் ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.  கர்ப்பக் காலத்தில் தாய் மற்றும் சேய் இருவருக்குமே ஊட்டச்சத்துக்கள் சம அளவில் கிடைக்க வேண்டும்.  கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு மற்ற பெண்களை காட்டிலும் கூடுதலாக 300 கிலோகலோரிகள் தேவைப்படுகிறது.  கர்ப்பிணிகளின் உணவில் சராசரியாக 65 கிராம் புரதம், 27மில்லிகிராம் இரும்புச்சத்து, ஃபோலேட், கால்சியம், ஐயோடின், சிங்க், வைட்டமின் ஏ, டி, மற்றும் பி6 போன்ற சத்துக்கள் தேவைப்படுகிறது.  இவை சரியாக இருக்குமானால் கருப்பையில் இருக்கக்கூடிய குழந்தையின் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.   கர்ப்பிணிகள் கட்டாயமாக உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய சத்துக்கள் குறித்து பார்ப்போம்.  

இரும்புச்சத்து: 

உடலுக்கு இரும்புச் சத்து மிகவும் முக்கியமானது.  அசைவ பிரியர்களுக்கு இரும்புச்சத்து எளிதில் கிடைத்துவிடுகிறது.  சைவ பிரியர்கள், வெல்லம் மற்றும் பேரிச்சை போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால்தான் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.  தாய்க்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது குறைமாத பிரசவம் ஏற்படுவதுடன் குழந்தை எடை குறைவுடன் பிறக்க நேரும்.  தினமும் பழச்சாறுகள், எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி, ப்ரோக்கலி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது.  

5cr64f

 

 

ஃபோலிக் அமிலம்:

கர்ப்பிணிகள் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் குழந்தையில் தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய சீரற்ற தன்மை குணமாகும்.  அத்துடன் குழந்தையின் கபால வளர்ச்சியில் ஏற்படக்கூடிய பிரச்னை சரியாகும். 

 

சிங்க்:

கர்ப்பக்காலத்தில் செல்களின் வளர்ச்சிக்கும், புரதத்தை தக்க வைப்பதற்கும் சிங்க் மிகவும் அத்தியாவசியமானது.  முழுதானியங்கள், பால், கடல் உணவுகள் மற்றும் பருப்பு வகைகளில் சிங்க் அதிகபடியாக இருப்பதால் இதனை தவறாமல் சாப்பிட வேண்டும்.   

 
 

கால்சியம்:

கர்ப்பத்தில் இருக்கக்கூடிய குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து  மிகவும் முக்கியமானது.  கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  வைட்டமின் டி உடலில் கால்சியத்தை தக்க வைக்க உதவுகிறது.  காய்கறிகள், தானியங்கள், பயறுகள், போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  அத்திப்பழம், பாதாம், டோஃபு, ப்ரோக்கலி மற்றும் கீரைகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம். 

 

வைட்டமின் சி:

உடலில் இரும்புச் சத்தை தக்கவைப்பதற்கு வைட்டமின் சி தேவைப்படுகிறது.  மேலும் இது இரத்தத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.  சிட்ரஸ் தன்மை நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வரலாம்.  

glphe1hg

 

நார்ச்சத்து:

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.  ஆலிவ் எண்ணெய், ரைஸ் ப்ரான் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி அமிலம், ஒரேசனால் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது.  மேலும் இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சமைப்பதற்கு இதனை பயன்படுத்தலாம். 

தவிர்க்க வேண்டியவை: 

கர்ப்பக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில உண்டு.  அதில் முக்கியமானவை பப்பாளி.  பப்பாளியில் பப்பைன் என்னும் பொருள் இருப்பதால் கருச்சிதைவு ஏற்படலாம்.  அதேபோல அஜினோமோட்டோவில் மோனோசோடியம் க்ளூட்டாமேட் என்னும் சுவை ஊக்கி இருக்கிறது.  இது புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.  மேலும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பதால் வாயுத்தொல்லை ஏற்படாமல் இருக்கும். 

 

.