This Article is From Jan 18, 2020

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருமண பத்திரிகையை அச்சடித்த மணமகன்!!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும் சூழலில் பிரபாத் கர்வால் என்ற மணமகன் தனது திருமண பத்திரிகையில் CAA ஆதரவு கருத்துக்களை அச்சிட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருமண பத்திரிகையை அச்சடித்த மணமகன்!!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்பதுபோன்ற வாசகங்கள் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

Narsinghpur:

குடியுரிமை சட்டதிருத்தமான CAA க்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் நாட்டின் பல்வேறு இடங்களில் நூதன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய பிரதேசத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் தனது திருமண பத்திரிகையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்களையும், எதற்காக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் திருமண பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபாத் கர்வால் என்ற மணமகனுக்கு சனிக்கிழமையான இன்று மாலை திருமணம் நடைபெறுகிறது.

இதையொட்டி அவர் அச்சடித்து அழைப்பு விடுத்த திருமண பத்திரிகைகளில்தான் குடியுரிமை சட்ட திருத்த ஆதரவு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

தனது திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தவறான எண்ணத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், சட்டத்தைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கவும் தான் இவ்வாறு செய்ததாக பிரபாத் கர்வால் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குடியுரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வை சரியான விதத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்வாலின் சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் ஆகும். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்து வரும் வன்முறைகள் தனக்கு அதிருப்தியும், வேதனையும் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமையை வழங்க குடியுரிமை சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக உள்ளதென்று கூறி போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.

.