This Article is From Apr 22, 2019

தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்களை வைச்சிருக்கோம்? பிரதமர் மோடி கேள்வி

பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை திருப்பி அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய விமானியை திரும்ப அனுப்ப பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
  • அணு பொத்தான் இருப்பதாக பாக். கூறி வந்த நிலையில், மோடி பதிலடி கொடுத்துள்ளா
  • இந்திய - பாக். பதற்றம் குறித்தே பாஜக பிரசாரம் இருந்து வருகிறது
New Delhi:

ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, பாகிஸ்தானின் மிரட்டலுக்கும், தீவிரவாத அச்சுறுத்தலுக்கும் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.

இந்தியாவை ஒருநேரத்தில் பாகிஸ்தான் அச்சுறுத்திவந்த காலம் இருந்தது. எங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது, அணு ஆயுத பட்டனை அழுத்தி தாக்கிவிடுவோம் என்று கூறியது, இதையே பல்வேறு அதிகாரிகளும் அரசிடம் கூறி வந்தார்கள்.

ஆனால், இப்போது பாகிஸ்தானின் அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளது என்றால், தீபாவளிக்கு வெடிக்கவா நாம் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்?

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீர்ரகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை நமது விமானப்படை தாக்கி அழித்தது. தீவிரவாதிகளின் முகாமுக்கே சென்று தாக்கினோம், ஆனால், அதற்குகூட காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்கிறது.

நான் செய்தது சரி என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அது சரியல்ல என்று நினைக்கின்றன என்று அவர் கூறினார்.

முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது.

அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார்.

.