This Article is From Aug 11, 2020

கொட்டும் மழையில் 7 மணி நேரமாக நின்று வாகன ஓட்டிகளைப் பாதுகாத்த பெண்மணி! யார் அவர்?

'பூக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து தான் எனது பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறேன்'

கொட்டும் மழையில் நின்று வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் பெண்மணி

New Delhi:

கொட்டும் மழையில் 7 மணி நேரமாக பாதாள சாக்கடைக்கு அருகில் நின்று, வாகன ஓட்டிகளை எச்சரித்த பெண்ணின் வீடியோ வைரலான நிலையில், அவர் யார் என்பது குறித்த விவரங்கள் வந்துள்ளன. 

மும்பையில் கனமழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு பெண்மணி சாலையின் நடுவே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை அருகில் நின்று கொண்டார். பின்னர் அவ்வழியே செல்லும் வாகனங்களை எச்சரித்தவாறே இருக்கிறார். கொட்டும் மழையில் குடை கூட பிடிக்காமல் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் அப்பெண்ணின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில், அந்த பெண் யார், அவருடைய பின்னனி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அப்பெண்னைப் பேட்டி எடுத்தது. அதன்படி, தனது பெயர் காந்த மூர்த்தி கலான் (50) என்பதும் பூக்கடை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

காந்த மூர்த்திக்கு 8 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் 5 பேருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இவர் ஒருவர் தான் பூக்கடை நடத்தி குடும்பத்தை நடத்தி வருகிறார். பூக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து தான் தனது பிள்ளைகளைப் படிக்க வைப்பதாகவும், தனது கணவர் ரயில் விபத்தில் படுகாயமடைந்து செயல்பட முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். 


மழையில் குடை இல்லாமல் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் சம்பவத்தைப் பற்றி கூறுகையில், 'அன்றைக்கு நல்ல மழை. ரோடு முழுவதும் மழை நீரில் மூழ்கி விட்டது. அப்போது பாதாள சாக்கடை ஒன்று திறந்திருந்தது. மழை நீரில் அதுவும் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதாள சாக்கடையில் தடுக்கி விபத்துக்குள்ளாகமல் இருக்க நானே அங்கு சென்று எச்சரித்தேன். சுமார் 7 மணி நேரமாக அங்கேயே நின்று வாகன ஓட்டிகளை எச்சரித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, மழையில் நனைந்து கொண்டிருந்த என்னை திட்டி அனுப்பினர். ஆனால், அதன் பிறகு பலரும் என்னுடைய செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். நான் அவ்வாறு வாகன ஒட்டிகளை எச்சரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக யாராவது பாதாள சாக்கடையில் தடுக்கி விழுந்திருப்பார்கள்'. இவ்வாறு தெரிவித்தார். 

.