This Article is From May 17, 2019

400 பேருக்கு மேல் எச்.ஐ.வி பாதிப்பு; அதிவேக தொற்று; பாகிஸ்தானில் பதற்றம்!

பாகிஸ்தானில் 2017 ஆம் ஆண்டு மட்டும், புதிதாக 20,000 பேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

400 பேருக்கு மேல் எச்.ஐ.வி பாதிப்பு; அதிவேக தொற்று; பாகிஸ்தானில் பதற்றம்!

பல துறை சார்ந்த வல்லுநர்கள், போலி மருத்துவர்களால்தான் எச்.ஐ.வி தொற்று வேகமாக பரவி வருகிறது என்கின்றனர். 

Ratodero:

தெற்கு பாகிஸ்தானில் இருக்கும் ஒரு கிராமத்தில் சுமார் 400 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்த உள்ளூர் மருத்துவர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட ஊசியை பயன்படுத்தியதுதான் இந்த எய்ட்ஸ் தொற்றுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் இருக்கும் வசாயோ என்கின்ற கிராமத்தில்தான் இந்த எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 இடங்களில் தற்போது கிராம மக்கள் அனைவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள், ‘இந்த கிராமத்தில் மட்டும் 400 பேருக்கு மேல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். பாகிஸ்தானின் பல்வேறு இடங்களுக்கு இந்த எய்ட்ஸ் பாதிப்பு பரவக்கூடும்' என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். 

பல பெற்றோர்கள், சோதனை அறைகளுக்கு வெளியே சோகம் படிந்த முகங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். பலருக்கு, ஏற்கெனவே தங்கள் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிந்து செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தனது ஒரு வயதுக் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்திருக்கும் முக்தர் பர்வேஸ், “இதை யார் செய்திருந்தாலும் அவர்களக்கு நான் சாபம் கொடுக்கிறேன்” என்று புலம்புகிறார். 

இமாம் சைதி என்கின்ற இன்னொரு தாய், தனது 5 குழந்தைகளுக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய வரிசையில் காத்திருந்தார். “எல்லோரும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம்” என்றும் மட்டும் சொன்னார்.

பாகிஸ்தானில் 2017 ஆம் ஆண்டு மட்டும், புதிதாக 20,000 பேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது ஆசிய அளவில் அதிக எச்.ஐ.வி நோயாளிகளை கொண்டுள்ள இரண்டாவது நாடாக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான் என்று சொல்கிறது ஐ.நா சபை.

பாகிஸ்தானின் அதிகரிக்கும் மக்கள் தொகையும், மிகவும் குறைவான உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறை வசதிகளும் நோயின் தாக்கத்தை மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 

பல துறை சார்ந்த வல்லுநர்கள், போலி மருத்துவர்களால்தான் எச்.ஐ.வி தொற்று வேகமாக பரவி வருகிறது என்கின்றனர். 

“சில அரசு தரவுகள், பாகிஸ்தானில் சுமார் 6,000,00 போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் சிந்த் மாகாணத்தில் மட்டும் 270,000 போலி மருத்துவர்கள் உள்ளார்கள்” என ஐ.நா.எய்ட்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

.