This Article is From Jan 08, 2019

சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா!

பேருந்து மீது கல் வீசிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா!

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே அமைச்சர் பாலகிருஷ்ணா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் சிறைத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்து ஆடுவதாகவும், அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

அப்போது அரசுப்பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இதில், தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர் மீது ஓசூர் காவல்துறையினர் 147, 148, 332, 353, 434, 307 ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவருக்கு ரூ.10,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இதில் குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் 2வது தீர்ப்பு இது ஆகும். அமைச்சராக இருப்பவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பாலகிருஷ்ணா ரெட்டியின் அமைச்சர் பதவி பறிபோவதோடு உடனடியாக அவர் எம்எல்ஏ என்ற அந்தஸ்தையும் இழக்க நேரிடும். சிறைத் தண்டனைக்கு பிறகும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனிடையே, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், இதனால், சிறைத் தண்டனையை நிறுத்திவைக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிறைத் தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தலைமைச் செயலருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் பாலகிருஷ்ண ரெட்டி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

.