This Article is From Sep 19, 2020

பள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை என்று அமைச்சர் கூறினார்

பள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனோ தொற்றின் காரணமாக தமிழக பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் சுமார் 40 சதவீத அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனோ தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட்தைக் கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து அமைக்கப்பட்ட 18 பேர் கொண்ட குழு, கடந்த மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, இதன் அடிப்படையில், பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

கொரோனோ தொற்றின் காரணமாக பள்ளி கல்விக்கான முன்னேற்ற வழியை மதிப்பீடு செய்து பரிந்துரைக்க தமிழக அரசு மே 12 அன்று பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் குழுவை ஒன்றை அமைத்தது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக கற்பிப்பதில் உள்ள சிக்கல்களை மதிப்பீடு செய்வது, கல்வியாண்டைத் தொடங்குவதில் தாமதம் மற்றும் இந்த தாமதத்தின் காரணமாக நேரத்தை எவ்வாறு ஈடுசெய்வது என்பது குறித்து இந்த குழு பரிசீலனை செய்தது.

ரூ .2.40 கோடிக்கு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிய பின்னர் கோபிசெட்டிபாளையத்தில் நம்பியூரில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,” இந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் ஆறு மணி நேரம் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களில் தங்கள் சந்தேகங்களைப் பெற முடியும். 

திருத்தப்பட்ட மாநில வாரிய பாடத்திட்டம் மாணவர்களுக்கு, மத்திய அரசு நடத்தும் எந்தவொரு போட்டித் தேர்வையும் எதிர்கொள்ள உதவும். சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை” என்று அமைச்சர் கூறினார்.

.