This Article is From Sep 05, 2019

இந்திய பொருளாதாரம் (Economy) குறித்து மன்மோகன், சிதம்பரம் கருத்துக்கு மத்திய அமைச்சரின் பதிலடி!

"அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, பணவீக்கம் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது"

இந்திய பொருளாதாரம் (Economy) குறித்து மன்மோகன், சிதம்பரம் கருத்துக்கு மத்திய அமைச்சரின் பதிலடி!

நாட்டின் பொருளாதார நிலை குறித்து சில நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்தார் மன்மோகன் சிங்

Ahmedabad:

இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விமர்சனங்களை முன்வைத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

“முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர், அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன என்பது குறித்து முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, பணவீக்கம் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், ஜிடிபி வளர்ச்சியும் 5 சதவிகிதம்தான் இருந்தது. 6, 7 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றாலே இது குறித்த தரவுகளை அறிய முடியும்” என்று கொதித்துள்ளார் அமைச்சர் அனுராக் தாக்கூர். 

நாட்டின் பொருளாதார நிலை குறித்து சில நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த மன்மோகன் சிங், “பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதை இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியாது. பழிவாங்கும் அரசியலை கைவிட்டுவிட்டு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

அதேபோல ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கஸ்டடியில் இருக்கும் ப.சிதம்பரத்திடம்,  'ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருக்கிறீர்கள்! அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டபோது, 

தனது 5 விரல்களையும் கேமராவில் காட்டி 5 சதவிகிதம் என்று சிதம்பரம் பதில் அளித்தார். பின்னர் பேசிய அவர், '5 சதவிகிதம் என்றால் உங்களுக்கு தெரியுமா? நினைவுபடுத்திப் பாருங்கள் 5 சதவிகிதம்' என்று பதில் அளித்தார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து நாட்டின் வளர்ச்சி 5 சதவிகிதமாக உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நபர்கள் விமர்சித்து வரும் நிலையில், சிபிஐ கஸ்டடியில் இருந்தபோதும் ப.சிதம்பரம் மத்திய அரசை கிண்டல் செய்தார். 


 

.