சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் உயிரிழப்பு!!

தேர்தல் பிரசாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஈடுபட்டிருந்தார். அவரது வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாஜக எம்.எல்.ஏ. பீமா மந்தாவி உயிரிழந்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தேர்தல் பிரசாரத்தின்போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்
  • நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
  • இன்னும் 2 நாட்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தாக்குதல்
Dantewada:

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மந்தாவி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். தண்டேவாடா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த எம்.எல்.ஏ.வின் வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். 

தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தண்டேவாடாவில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த கொடூர சம்பவத்தை மாவோயிஸ்டுகள் நிகழ்த்தியுள்ளனர். 

உள்ளூர் மக்களை தேர்தலில் வாக்களிக்காதீர்கள் என்று ஏற்கனவே மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இதற்கிடையே பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவோயிஸ்டு பகுதியில் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதனை மீறி எம்எல்ஏ  பிரசாரம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பிரசாரத்திற்கு புல்லட் ப்ரூஃப் வாகனத்தை எம்எல்ஏ உபயோகம் செய்துள்ளார். அதையும் மீறி, இந்த தாக்குதல் சேதத்தை அளித்திருக்கிறது. 

உயிரிழந்தவர்களில் பாதுகாப்பு படையினை சேர்ந்தவர்களும் இருப்பார்கள் என நம்பப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் மற்ற கார்களில் இருந்தவர்கள் வெளியே வந்தபோது, அவர்களை மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாதுகாப்பு படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். உயர் மட்டக்குழு கூட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் நடத்தியுள்ளார். 
 


இந்த சம்பவத்தை கண்டித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், '' சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலை கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தியாகம் வீண் போகாது. 

உயிரிழந்த எம்.எல்.ஏ. பீமா மந்தாவி பாஜகவுக்காக தன்னை அர்ப்பணித்தவர். ஒழுக்கமும், ஆற்றலும் கொண்ட அவர் சத்தீஸ்கர் மக்களுக்காக சேவை செய்திருக்கிறார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில்ன்போது காங்கிரசின் தேவ்தி கர்மாவிடம் இருந்து தண்டேவாடா தொகுதியை பாஜகவின் பீமா மந்தாவி கைப்பற்றினார். சத்தீஸ்கரில் ஏப்ரல் 11, 18, 23 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com