’முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால்..’ மேனகா காந்திக்கு நோட்டீஸ்!

மக்களவைத் தேர்தல் 2019: தனது பேச்சு திரித்து கூறப்பட்டதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

’முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால்..’ மேனகா காந்திக்கு நோட்டீஸ்!

2-3 நிமிடம் மேனகா காந்தி பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • உதவிகேட்ட வருபவர்களுக்கு தான் பொறுப்பல்ல என்று கூறியிருந்தார்.
  • 2-3 நிமிடம் கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
  • தனது பேச்சு திரித்து கூறப்பட்டதாக மேனகா கூறியுள்ளார்.
Sultanpur:

உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின், சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கேட்டு சுல்தான்பூர் மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நான் உறுதியாக, இந்தத் தொகுதியில் வெற்றி பெற போகிறேன். அதனால், முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்காமல், வெற்றிக்குப் பின் என்னிடம் உதவி கேட்டுவந்தால் அவர்களுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் என்று மேனகா காந்தி தேர்தல் பிரசாரத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் தேர்தல் அதிகாரி பி.ஆர்.திவாரி கூறும்போது, மேனகா காந்தியின் சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோவில் மேனகா காந்தி பேசியதாவது, நான் உறுதியாக பெற போகிறேன், இந்தத் தொகுதி மக்களின் அன்பாலும், ஆதரவாலுமே இந்த வெற்றி சாத்தியமாக உள்ளது. இந்த வெற்றியில் முஸ்லீம்களின் பங்கு இல்லாவிட்டால், அது நன்றாக இருக்காது.

அத்துடன் இங்குள்ள இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்காமல், வெற்றிக்குப் பின் என்னிடம் உதவி கேட்டுவந்தால் அவர்களுக்கு நான் ஏன் உதவி செய்யவேண்டும் என யோசிக்க வேண்டும். இது ஒரு வகையில் கொடுத்து வாங்கும் கொள்கை போன்றதுதான். நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் பிள்ளைகள் அல்லவா? இந்த வெற்றி உங்களின் துணையுடனோ அல்ல துணையில்லாமலோ நிச்சயம் சாத்தியமாகும் என்று கூறியிருந்தார்.

Newsbeep

மேலும், ஏற்கனவே எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. உங்களுக்கு நான் நிச்சயம் தேவைப்படுவேன். அதனால், அடிதளத்தை உறுதிப்படுத்த வேண்டியது உங்களின் கடமை. தேர்தலில் இந்த தொகுதி வாக்குச்சாவடியில் எனக்கு 50 அல்லது 100 வாக்குகள் குறையலாம்..

ஆனால், ஏதேனும் உதவி என்றால் நீங்கள் என்னிடம் வந்து நிற்க வேண்டும். நான் எந்த பாகுபாடும் பார்க்கவில்லை, அப்போது நான் வலியை மட்டுமே பார்க்கிறேன். அன்பா அல்லது வருத்தமா? உங்கள் கையில் தான் முடிவு உள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையே, தனது பேச்சு திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று மேனகா காந்தி கூறியுள்ளார். நான், முஸ்லீம்கள் மீது அதிக அன்பு செலுத்துகிறேன். பாஜக சிறுபான்மை பிரிவினர் கூட்டத்தை நான்தான் கூட்டினேன். அதில் தவறாக எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.