This Article is From Jul 31, 2018

அசாம் கணக்கெடுப்பு, மக்கள் போரை உருவாக்கும் - மம்தா எச்சரிக்கை

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு கணக்கின் வரைவு பட்டியலில் 40 லட்சம் பேர் இடம் பெறாதது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார்

அசாம் கணக்கெடுப்பு, மக்கள் போரை உருவாக்கும் - மம்தா எச்சரிக்கை
New Delhi:

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு கணக்கின் வரைவு பட்டியலில் 40 லட்சம் பேர் இடம் பெறாதது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார். “ 40 லட்சம் மக்கள் எங்கே போவார்கள். பா.ஜ.க மக்களை பிரிக்கும் சதியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மக்கள் போரை உருவாக்கி, ரத்த களரியாக்க போகிறது என எச்சரித்திருந்தார். இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது.

அக்கட்சியின் தலைவர் அமித் ஷா “ அரசியல் கட்சிகள் கூறும் கருத்துக்களை கேட்டு அதிர்ச்சையடைந்தேன். இந்தியர்களின் உரிமை குறித்து எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. போர் சூழல் உருவாகும் என்று கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க நினைக்கின்றார். வாக்கு வங்கியை பெற இப்படி பேசுகிறார். இந்திய மக்களின் உரிமையை காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

இதற்கு மீண்டும் பதிலடி கொடுத்த மம்தா “ யார் இந்தியர்கள் என அவர்கள் முடிவு செய்ய அவர்கள் யார். பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இந்தியர்கள். மற்றவர்கள் இந்தியர்கள் அல்ல. அரசியல் என்பது சகிப்புத் தன்மை. அரசியல் என்பது ஜனநாயகம்” என்றார்.

மேற்கு வங்கம் மாநிலத்திலும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன், கணக்கெடுப்பு நடத்தி அகதிகளை வெளியேற்றுவோம், என அம்மாநில பா.ஜ.கா தலைவர் கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய மம்தா “ அவர்கள் மேற்கு வங்கத்தின் காவலர்களா என்ன. மேற்கு வங்கம் குறித்து முடிவெடுக்க அவர்கள் யார்? மேற்கு வங்க அரசு இங்கு இருக்கிறது.” என்று கடுமையாக பேசியிருக்கிறார்.

.