This Article is From Sep 02, 2020

ஜிஎஸ்டி பற்றாக்குறை: 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

ஜிஎஸ்டி பற்றாக்குறை தொடர்பாக தமிழ்நாடு உட்பட 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஜிஎஸ்டி பற்றாக்குறை: 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

ஜிஎஸ்டி இழப்பீடு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 மாநில முதல்வர்கள் கடிதம்

New Delhi:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் வகையில், மாநிலங்கள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்று, திருப்பி செலுத்த வேண்டும் என்று அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக அல்லாத 6 மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 


இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்திற்கு 12,250 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை முழுமையாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் இந்த கடன் திட்டம், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்களுக்கு மேலும் சுமையாகவே இருக்கும். எனவே, மத்திய அரசே தாமாக முன்வந்து ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செஸ் வரியை வழங்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், 'செஸ் வசூலில் கடனை உயர்த்தி அசலும், வட்டியும் வழங்க வேண்டும். மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு 3 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.65 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவிற்கு மட்டும் 83 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இந்த நிலையில், மாநிலங்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு உதவ வேண்டும்' இவ்வாறு தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், 'மத்திய அரசின் ஜிஎஸ்டி தீர்வு குழப்பான சூழலை உருவாக்கியுள்ளது. பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் மாநிலத்தின் நிதியை திருப்பிச் செலுத்துவதற்கான வசதி தேவை' இவ்வாறு கூறியுள்ளார்.

.