This Article is From Apr 16, 2019

ஒரு சீட்டுக்காக கட்சியை திமுக-விடம் அடகுவைத்து விட்டார் வைகோ: எடப்பாடி

ஒரு சீட்டுக்காக வைகோ அவரது கட்சியை திமுக-விடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரு சீட்டுக்காக கட்சியை திமுக-விடம் அடகுவைத்து விட்டார் வைகோ: எடப்பாடி

ஈரோடு மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, நம்முடைய தலைமையில் அமைந்திருப்பது மெகா கூட்டணி. மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணி. திமுக தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, கொள்கை

இல்லாத கட்சிகளின் கூட்டணி. நம்முடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து இருக்கிறோம்.

ஆனால் திமுக கூட்டணியில், திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் என்று அறிவித்து உள்ளார். அந்த கட்சியில் உள்ள வேறு எந்த கட்சியும் அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. இப்படி அந்த கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி.

திமுக கூட்டணி இந்த தொகுதியில் மதிமுக கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது. ஒரு கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் எந்த கட்சியின் உறுப்பினர். அவர் மதிமுக உறுப்பினர் என்பதா? திமுக உறுப்பினர் என்பதா? மதிமுக கட்சியினர் எப்படி கூறி அவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.

முன்பு திமுகவில் இருந்து பிரிந்து வந்த வைகோ, ஸ்டாலின் ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் என்று விமர்சித்தார். அதுமட்டுமா?, திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனம், திமுக காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறது என்று கூறியவர்.

இப்படி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த வைகோ, இன்று கூனிக்குறுகி, திமுக முன்பு மண்டியிட்டு, ஒரு சீட்டுக்காக பிச்சை எடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார். பச்சோந்திகளை பார்த்திருக்கிறோம். அதுபோன்று நிறம் மாறுபவர் வைகோ. அவர் ஒரு திறமையான பேச்சாளர், திறமையான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்கவில்லை.

ஒரு சீட்டுக்காக வைகோ அவருடைய கட்சியை திமுகவிடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது. துண்டை இழுத்து இழுத்து அவர் பேசும்போது அவரை ரசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரது செயல்கள் அசிங்கமாக இருக்கிறது என்று வைகோவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
 

.