உத்தர பிரதேசத்தில் மாயாவதியுடன் மல்லுக்கட்டும் பிரியங்கா!! - தலித் தலைவருடன் சந்திப்பு

நேரடி அரசியல் களம் கண்டிருக்கும் பிரியங்கா காந்திக்கு கடந்த மாதம் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் 41 மக்களவை தொகுதிகள் வருகின்றன.

உ.பி.யில் பிரபல தலித் தலைவர் சந்திர சேகர ஆசாத்தை சந்தித்து பேசியுள்ளார் பிரியங்கா.

Meerut:

உத்தர பிரதேசத்தில் தலித்துகளின் வாக்குகளை காங்கிரஸ் பக்கம் இழுக்கும் முயற்சியில் பிரியங்கா காந்தி இறங்கியுள்ளார். இது மாயாவதி அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

உத்தர பிரதேசத்தில் பீம் ஆர்மி என்ற அமைப்பு தலித் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இதன் தலைவராக 30 வயதாகும் வழக்கறிஞர் சந்திர சேகர ஆசாத் செயல்பட்டு வருகிறார். அவர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்றபோது தேர்தல் விதிகளை மீறியதாக கூறி கைது செய்யப்பட்டார். 

போலீஸ் கஸ்டடியில் அவர் வைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சந்தித்து பிரியங்கா காந்தி நலம் விசாரித்தார். முன்னதாக சந்திரசேகர ஆசாத்தை சந்திப்பதற்கு பிரியங்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் 15 நிமிட வாக்குவாதத்திற்கு பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், ''நான் இங்கு சந்திர சேகர ஆசாதின் உடல் நலனை விசாரிக்க வந்தேன். அவர் இளம் தலைவர். அவர் பேச விரும்புகிறார். அவருக்கு எதிராக மாநில அரசு செயல்பட்டு அவரை ஒடுக்கப் பார்க்கிறது. அவரை கைது செய்திருந்திருக்க கூடாது.'' என்று கூறியுள்ளார். 

பிரியங்கா பொறுப்பாக இருக்கும் 41 மக்களவை தொகுதிகளில் சுமார் 30 சதவீத வாக்குகள் தலித் மக்களாக இருக்கின்றனர். எனவே பிரியங்காவின் இந்த நடவடிக்கை தலித் வாக்குகளை கவரும் யுக்தியாக கருதப்படுகிறது. மேலும் சில சிறிய கட்சிகளை சந்தித்து பிரியங்கா காந்தி ஆதரவு திரட்டி வருகிறார். இதனால் மாயாவதி தரப்பு கலக்கம் அடைந்திருக்கிறது.